சீருடையில் சாராயம் கடத்திய பெண் காவலர் ரூபிணி அவரது கணவன் ஜெகதீஷ்  உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 336 புதுச்சேரி மது பாட்டில்களும் 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

நாகை மாவட்டத்தில் புதுச்சேரி மாநில சாராயம், மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை பல்வேறு பகுதிகளில் ஜருராக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தப்படுவதாக தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



 

அப்போது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சென்ற வெள்ளை நிற (Scorpio) சொகுசு காரை, தனிப்படை போலீசார் பின்தொடர்ந்தது சென்றனர். அந்த கார் அக்கரைப்பேட்டை கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபி பகுதிக்கு சென்றது. அங்கு காரில் இருந்து இறங்கிய காவல் உடை அணிந்த பெண் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட மூன்று பேர், காரில் இருந்த சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை அங்கிருந்த பெண் உள்பட பல்வேறு நபர்களிடம் விற்பனைக்கு கொடுத்ததை மறைந்திருந்த தனிப்படை போலீசார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காரை சுற்றி வளைத்து காவலர் உடையில் இருந்த பெண் உள்ளிட்ட 6 பேரை பிடித்து விசாரித்தனர்.

 

இதில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல்நிலையம் காவலர் ரூபிணி, காரை ஓட்டி வந்த இவரது கணவர் ஜெகதீஸ், காடம்பாடியைச் சேர்ந்த கோபிநாத், தெற்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த ராஜசேகர், மகாலிங்கம், மகேஸ்வரி ஆகியோர் என்பதும் சட்டவிரோதமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.



 

இதையடுத்து, பெண் காவலர் ரூபினி அவரது கணவர் ஜெகதீசன் உட்பட ஆறு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆட்டோ இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் சாராயம், 7 பெட்டிகளில் இருந்த 336 மது பாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் நாகை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆட்சியர் படுத்தி உள்ளனர்.