தேவூரில் டாஸ்மாக் கடையில் ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் மதியம் 1:30 மணி அளவில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி புகழேந்திரன், அஜித் ஆகிய இருவரும் மதுபானம் கேட்டு தகாரறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர்கள் உடனடியாக  மேற்பார்வையாளர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது விற்பனை செய்த பணத்தை வங்கியில் கட்ட வந்த விஜயகுமார் அவசரக்கதியில் வந்து கீவளூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.




முன்னதாக மதுபான கடையில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி மதுபானம் கேட்டவர்களை பாஸ்கர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மது போதை தலைக்கேறிய நிலையில் நேற்று இரவு  பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலச்சுந்தரம் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.


இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்ததின் பேரில் DSP பாலகிருஷ்ணன்,காவல் ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்து பின்னர் புகழேந்திரன், அஜித் உள்ளிட்ட  நான்கு பேரை கைது செய்து கீவலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் ஆயுதத்தை காட்டி மதுபானம் கேட்டதும் தட்டி கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய  சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண