திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் போலீசில் சரணடைய வந்த வாலிபர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வெல்டர் தொழில் செய்து வரும் வேலு என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களான செல்வா, கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேருடன் சென்று செவ்வாப்பேட்டையை அடுத்த சிறுகடல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது சைடிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த செல்வா தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து, வயிறு, கை, கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் வேலுவின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே செவ்வாப்பேட்டை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே அவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள் தான் வெல்டர் வேலுவை கத்தியால் வெட்டி கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் வேலு கொலை செய்யப்பட்ட வழக்கில் கோகுல் காவல் நிலையத்தில் சரணடைய சென்றார். ஆனால் இதுபற்றி அறிந்த வேலுவின் நண்பர்கள் சிலர், அவரை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் கடத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கோகுலை தேடி வந்தனர். இந்நிலையில் தொட்டிகலை பொன்னி அம்மன் கோயில் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நிலம் ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியபோது கொலை செய்யப்பட்டது கோகுல் என தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் வேலு கொலைக்கு பழிக்குப் பழியாக அவரது நண்பர்களான அயத்தூரைச் சேர்ந்த அஜித், வேப்பம்பட்டு சதீஷ் மற்றும் 17 வயதுக்கொண்ட 2 சிறுவர்கள் ஆகிய 4 பேரும் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கோகுல் சரணடைய வருவதை அறிந்து, அவரை கடத்தி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்