மும்பையில் 3 மாத குழந்தையை கொன்றதாக தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கலாசௌகியில் வசிக்கும் ஒருவர் தனது மூன்று மாத பெண் குழந்தை தனது வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத வியாபாரிகளால் கடத்தப்பட்டதாக மும்பை குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு குழந்தையை கொன்றதாக 32 வயதான பெற்ற தாயையே போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் “கைது செய்யப்பட்டுள்ள சர்பணா பஜ்ரங் மகுடத்திற்கு ஏற்கெனவே 8 வயதில் மகள் உள்ளார். இதனால் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் மிகவும் மன நெருக்கத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இதுப்பற்றி அவர் கூறுகையில் அவர்களின் வீட்டிலும் ஆண் குழந்தை பற்றிய பேச்சே இருந்து வந்திருக்கிறது. இது அவருக்கு மேலும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.
எனவே அவர் உள்ளூர் போலீசாரிடம் ஒரு சித்தரிக்கப்பட்ட கதையை கூறி புகார் அளித்துள்ளார். அதில், 30- 35 வயதுடைய வியாபாரி ஒருவர் பழைய துணிகளுக்கு பக்கெட் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்ததாகவும் அந்தப் பெண் அறைக்குச் சென்றபோது, வியாபாரி தன்னைப் பின்தொடர்ந்து வந்து குளோரோஃபார்ம் தடவிய துணியை வாயில் அழுத்தி, தன்னை மயக்கமடையச் செய்ததாக அந்தப் பெண் கூறியிருந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையை வியாபாரி தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
பின்னர் சுயநினைவு வந்ததும் கணவருக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தோம் எனவும் அந்த பெண் குறிப்பிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் குழந்தையின் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் நாடகமாடுவதையும் ஒப்புக்கொண்டார். அந்த பெண் குழந்தையை வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் முழ்கடித்துவிட்டு சென்றது தெரியவந்தது. ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கத் தவறியதற்காக தனது குடும்ப உறுப்பினர்களால் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், விரக்தியில் தான் இந்தச் செயலைச் செய்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்” என போலீசார் கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்