தனது மகன் இளம் பெண் ஒருவரின் கொடூர மரணத்துக்குக் காரணம் எனத் தெரிந்ததும் தனது செல்வாக்கு கொண்டு மறைக்க முயலாமல் கிடைத்த ஆதாரங்களை போலீஸில் கொடுத்து மகன் கைதுக்கு உதவியுள்ளார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
மும்பை வில்லே பார்லே பகுதி சற்று செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி. இப்பகுதியில் அமைந்துள்ள மிஸ்கிட்டா சாவல் எனும் பகுதியில் வசித்து வந்தார் ஜைகோ மிஸ்கிட்டா. வயது 27. அதே பகுதியில் வசித்து வந்தார் கேரல் மிஸ்கிட்டா வயது 29. இவர்கள் அண்டை வீட்டார். இந்நிலையில் காந்த ஜனவரி 24 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு வெளியில் சென்ற கேரல் மிஸ்கிட்டா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 1.30 மணியளவில் மீண்டும் ஃபோன் செய்து நான் லேட்டாக வருவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. கேரலின் தாயார் போலீஸில் புகார் கொடுத்தார். 10 நாட்களுக்குப் பின்னர் பிப்ரவரி 3 ஆம் தேதி கேரலின் அழுகிய உடல் பால்கர் மேனர் சாலையில் ஒரு புதர் மண்டிய பகுதியிலிருந்து கிடைத்தது. அதே நாளில் போலீஸார் கேரலின் நண்பர் ஜைகோ மிஸ்கிட்டா மற்றும் அவரது கூட்டாளி தேவேந்திர குமாரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில், ஜைக்கோவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து கேரல் நச்சரித்து வந்தார். இந்நிலையில் ஜைக்கோவை தன்னை சந்திக்க பால்கர் வருமாறு அழைத்துள்ளார் ஜைக்கோ. ஜனவரி 24 இரவில் கேரல் தனது வாகனத்தில் ஜைக்கோவை சந்திக்கச் சென்றுள்ளார். அங்குதான் ஜைக்கோவும் தேவேந்திராவும் இணைந்து கேரலை கொலை செய்து சடலத்தை புதருக்குள் வீசியுள்ளனர் என்றனர்.
ஜைக்கோவின் தந்தை கொடுத்த ஆதாரங்கள்..
இந்த குற்றச்சம்பவம் குறித்து ஜைக்கோவின் தந்தை ஆன்செம் மிஸ்டிக்கா கூறியதாவது:
"எனது மகன் ஜைக்கோவுக்கும், கேரல் மிஸ்கிட்டாவுக்கும் காதல் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. காவல்துறையினர் சொல்லித் தான் அவர்களுக்குள் உறவு இருந்தது என்றும் அது கசந்துபோய் பழிதீர்க்கும் விதமாக என் மகன் கொலை செய்ததும் தெரியவந்தது. அப்படி செய்திருந்தால் அது மிகவும் தவறான முடிவு. உண்மை வெளிவரட்டும். நான் கேட்டரிங் மற்றும் அக்வாரியம் தொழில் செய்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஜைக்கோ மூத்தவன். இங்குள்ள யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் ஜைக்கோவும், கேரலும் காதலித்தார்கள் என்று சொல்ல மாட்டார்கள். என் தொழிலேயே எடுத்து செய்யுமாறு ஜைக்கோவிடம் சொன்னேன். ஆனால் அவனோ கால் சென்டர் வேலைக்குச் செல்வேன் என்றான். சரி என்று அவன் பாதையிலேயே விட்டேன். இப்போது பலரும் 2011ல் இருந்து 14 வரை கேரலும், ஜைகோவும் தொடர்பில் இருந்ததாகக் கூறுகின்றனர். இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. ஒருமுறை கூட கேரல் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. எங்கள் குடும்ப,நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் கேரல் குடும்பம் கலந்து கொண்டதில்லை. அப்படியிருக்க எப்படி தொடர்பு எனக் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை.
ஜனவரி 23 ஆம் தேதி நாங்கள் (ஜைக்கோ உட்பட) அனைவரும் குடும்பத்துடன் எங்களின் பாயந்தர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். மறுநாள் 24 ஆம் தேதி தான் திரும்பினோம். அதன் பிறகு ஜைகோ எப்போது வெளியில் சென்றான் என்று தெரியவில்லை. அன்று அவன் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் ஜனவரி 25 ஆம் தேதி தான் வந்தான். எங்கள் மகனுக்கு நாங்கள் பெண் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது திடீரென கேரலின் தாயார் என் மகனால் தான் எல்லாம் எனக் கூறுகிறார். அக்கம்பக்கத்தினரும் ஜைக்கோ ஏதோ அழுத்தத்திலேயே இருந்தான் எனக் கூறுகின்றனர். அப்படி ஏதும் இருந்திருந்தால் அவர்கள் என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது அல்லவா?
திடீரென பிப்ரவரி 3 ஆம் தேதி ஜைக்கோ அந்தப் பெண்ணை கொலை செய்துவிட்டதாக போலீஸார் எனக்கு ஃபோனில் சொல்கின்றனர். உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் போலீஸார் சொல்வது போல் ஜைக்கோ அந்தப் பெண்ணை கொலை செய்திருந்தால் நிச்சயமாக அவன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
என் மகனுக்கு எதிரான ஆதாரத்தை நானே தான் போலீஸில் கொடுத்தேன். கேரல் கொலை செய்தி பரவியவுடனேயே, ஜைக்கோவின் பெயர் அடிபடத் தொடங்கியது. அப்போது எனது இளைய மகன் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தான். அப்போது ஜனவரி 24 மாலை என் மகன் ஜைக்கோ வீட்டிலிருந்து இருச்சக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியிருந்தது. எங்கள் சிசிடிவி காட்சிகளை நாங்கள் பார்த்துவிட்டால் அது ஆட்டோமேட்டிக்காக சில நாட்களில் அழிந்துவிடும். அதனால் நான் போலீஸாரை உடனே வரும்படி சொல்லி அந்த சிசிடிவி ஆதாரத்தைக் கொடுத்தேன். ஜைக்கோவின் நண்பர் ஒருவர் ஃபோன் செய்து, ஜனவரி 25 ஆம் தேதி ஜைக்கோ திடீரென தனது வீட்டிற்கு வந்து லேப்டாப், மொபைல் ஃபோனை கொடுத்ததாகச் சொன்னான். நாங்கள் அதையும் பெற்று போலீஸில் கொடுத்துள்ளோம். 25 ஆம் தேதி ஜைக்கோ அணிந்திருந்த உடையைக் கூட கொடுத்துவிட்டோம் என்றார்.
கேரலின் தாயார் கூறுகையில், "ஜைக்கோ எங்கள் வீட்டுக்கு வருவான். என் மகளிடம் என்னிடமும் நன்றாகப் பேசுவான். என் மகளை திருமணம் செய்வதாகவே கூறியுள்ளான். ஆனால் திடீரென்று சண்டை போட்டுச் சென்றான். அதன் பின்னர் என் மகளை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டான். இப்போது கொலையும் செய்துவிட்டான். என் மகளை திருமணம் செய்ய பிடிக்காவிட்டால் பிரிந்து சென்றிருக்கலாம். எதற்காக கொலை செய்தான். அவள் உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு ஆக்கிவிட்டான். என் செல்ல மகளின் காலில் இருந்த தழும்பு, உடலில் இருந்த டாட்டூ வைத்தே அவளைக் கண்டுபிடித்தேன். இது எத்தனை மோசமானது” என்று கதறி அழுதார்.
இந்த வழக்கில் ஜைக்கோ, கேரலுக்கு எழுதிய இரண்டு பக்கம் கடிதம் முக்கிய சாட்சியாக மாறியுள்ளது. அதை கேரலின் தாயார் சான்ட்டா க்ரூஸ் காவல்நிலையத்தில் கொடுக்க அதன் அடிப்படையிலேயே போலீஸார் ஜைக்கோவை கைது செய்துள்ளனர்.