ரயிலில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ரயிலில் பெண்ணுக்கு இவ்வாறாக முத்தம் கொடுத்தது பாதிக்கப்பட்ட பெண்ணின் மாண்பைக் குறைக்கும் செயல் எனக் கூறிய நீதிபதி கோவாவைச் சேர்ந்த அந்த 37 வயது இளைஞருக்கு,  ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


நடந்தது என்ன?


கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இளம் பெண் ஒருவர் கோவாவில் இருந்து மும்பைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது 37 வயது நபர் ஒருவர் அந்த ரயிலில் ஏறியுள்ளார். ஏறியதிலிருந்தே அந்த நபர் அப்பெண்ணை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்பெண் அவரை சட்டை செய்யவில்லை. மும்பை சத்திரபதி ரயில் நிலையம் வந்தவுடன் அப்பெண் இறங்கத் தயாரானார். அப்போது, அந்த இளைஞர் வேகமாக எழுந்து பெண்ணின் வலது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதிர்ந்து போன அப்பெண் கூச்சலிட ரயிலில் இருந்தோர் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். ஆனால் போலீஸில் அந்த நபரோ,நான் வேண்டுமென்று செய்யவில்லை. கூட்டத்தில் பின்னால் இருந்த நபர் என் மீது விழ நான் அந்தப் பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டதுபோல் ஆகிவிட்டது என்றார். என் உதடு அவர் கன்னத்தில் பட்டது. நான் முத்தமிடவில்லை என்றார்.


ஆனால் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. மெட்ரோபாலிட்டன் நீதிபதி விபி கேதார் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றம் நிரூபணமானதாகக் கூறினார். மேலும் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும். ரூ.10,000 அபராதமும் விதித்தார். அதில், ரூ.5000 பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார். போலீஸ் எஃப்ஐஆரில் தெளிவுபட அந்த நபர் ஏறியதில் இருந்தே அப்பெண்ணே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதி தீர்ப்பை வழங்கினார்.




பெண்ணின் வாக்குமூலத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார். மேலும் நீதிபதி கூறுகையில், அந்தப் பெண் அவரது சாட்சியத்தை வழங்கியபோது தெளிவாகத் தனக்கு நேர்ந்த அவமானத்தை விவரித்தார். ஒரு பெண்ணால் வெகு நிச்சயமாக ஒரு ஆணின் பார்வையைக் கணிக்க முடியும். அந்த ஆண் ரயிலில் ஏறியதிலிருந்தே தன்னை பார்வையாலேயே வாட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது பெண்களுக்கு இயற்கை கொடுத்த கொடை. அவர்கள் அடுத்தவரின் பார்வையை வைத்தே நோக்கத்தை கண்டறிந்துவிடுவர் என்றார். அவர் கூற்றின்படி அந்த நபர் சரியான தருணத்திற்காகக் காத்திருந்து இந்தக் குற்றத்தை செய்துள்ளார் என்று கூறி நீதிபதி தீர்ப்பை வழங்கினார்.