சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மனைவி பூங்கொடி (54). இவரது மகன் சுரேஷ் (எ) சுப்ரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவக்குமார் சங்ககிரி அரசிராமணியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அண்ணன், தங்கை இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் இரு குடும்பங்களும் சில ஆண்டுகளாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். இதனிடையே சிவக்குமாரின் மகள் எடப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் மகள் அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் உள்ள பால் மையத்தில் தினமும் மாலை பால் ஊற்றுவது வழக்கம். அதன்படி நேற்று குள்ளம்பட்டி பகுதியில் உள்ள பால் மையத்தில் சிவக்குமாரின் மகள் பால் ஊற்றி விட்டு மிதிவண்டியில் வீடு திரும்பியுள்ளார். 



அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் (எ) சுப்பிரமணி தனது தாய் மாமா சிவகுமாரின் மகளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காததால் தனது தாயின் உதவியோடு சுப்பிரமணி, சிவகுமாரின் மகளை காரில் கடத்தி செல்ல முயன்றுள்ளார். அவரின் பிடியிலிருந்து மாணவி தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் சம்பவத்தில் காயமைடந்த பள்ளி மாணவி சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி தேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாணவியை கடத்த முயன்ற அத்தை பூங்கொடி மற்றும் அத்தை மகன் சுரேஷ் (எ) சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சங்ககிரி அருகே திருமணம் செய்து கொள்ள பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சொந்த அண்ணன் மகளை கடத்த முயன்ற அத்தை மற்றும் அத்தை மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.