சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காலூராம். 63 வயதான அவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு காலூராமின் நகைக்கடைக்கு இரு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் கம்மல், சங்கிலி, மோதிரம் என பல நகைகளை பார்த்துள்ளனர். பல மாடல் நகைகளை பார்த்த அவர்கள் பின்னர் எந்த நகையையும் பிடிக்கவில்லை என்று கூறி சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபிறகு அவர்கள் வாங்கிப் பார்த்த சங்கிலி, கம்மல் மற்றும் மோதிரங்களில் ஏதோ மாற்றம் இருப்பதுபோல் காலூராம் உணர்ந்துள்ளார்.


உடனே அவர் அந்த நகைகளை சோதித்து பார்த்தபோது, சங்கிலி, மோதிரங்கள் மற்றும் கம்மல் கவரிங் ஆக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான், அந்த இரண்டு பெண்களும் தனது நகைகளை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்திருப்பதை காலூராம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.




உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், காலூராம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நூதன திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் ஆட்டோ ஒன்றில் ஏறிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோவில் ஏறிச்சென்ற இரண்டு பெண்களும் தாய் மற்றும் மகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ்மாதிரை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சுமதி மற்றும் அவரது மகள் 26 வயதான பிரியதர்ஷினி ஆகியோர் என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.




இதையடுத்து, தாய் சுமதி மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் 2 பேரிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான நகைக்கடைகளிலும் இதேபோல நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தாய் சுமதி மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரையும் தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீஞ்சூரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் என்பவர், போலி வாடிக்கையாளர்கள் மூலம் கவரிங் நகைகளை வங்கியில் அடமானம் வைக்கச் சொல்லி, அதற்கு தங்க நகை என்று சான்றிதழ் அளித்து ரூபாய் 4 கோடியே 52 லட்சம் மோசடி செய்தத கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.