சமீபகாலமாக நாடு முழுவதும் தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், மயிலாடுதுறையிலும் நேற்று மாலை நாயால் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரின் மையப்பகுதிகளில் வெறிபிடித்த நிலையில் சுற்றித் திரிந்த ஒரு தெருநாய், சாலையில் சென்றுகொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோரைத் துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நகரின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்

மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூறைநாடு உள்ளிட்ட இடங்களில் ஒரு தெருநாய் வெறிபிடித்த நிலையில் அங்கும் இங்கும் ஓடியுள்ளது. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைத் திடீரெனத் துரத்திச் சென்று அந்த நாய் கடித்துள்ளது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை 

இதில், காலில் பலத்த காயமடைந்து, ரத்தம் சொட்டச் சொட்ட பலர் அரசு மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்தனர். சிவக்குமார் (42), தனுஸ்ரீ (17), கற்பகம் (62) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு உடனடியாக நாய்க்கடிக்குரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் வீடுகளுக்கு திரும்பினர்.

நகராட்சிக்குத் தகவல் மற்றும் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்தது. அதன் பேரில், நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் விரைந்து மருத்துவமனைக்கு வந்து, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், வெறிபிடித்த நாயைப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வரவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறையில் தெருநாய்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்று தெருநாய்கள் மனிதர்களைத் தாக்குவது ஒருபுறம் இருக்க, போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளைத் துரத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) அறுவை சிகிச்சை

எனவே, நகரின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அவற்றுக்குப் பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெறிபிடித்த நிலையில் காணப்படும் நாய்களை அடையாளம் கண்டு, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் 

மேலும் கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருந்தபோதே இந்தளவுக்கு அச்சப்படாத மயிலாடுதுறை மக்கள் தற்போது சிறுத்தையைவிட நாய்களை கண்டு அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.