ஹைதராபாத் கரீம் நகரில் மைனர் சிறுவன் ஓட்டிவந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடிசைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சொந்த வீடு மற்றும் நிலம் இன்றி சாலையோரத்தில் தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு வேளை சாப்பிட்டிற்காகக் கிடைத்த வேலையை செய்து வரும் இவர்கள் இரவு நேரத்தில் மட்டும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசையில் வந்து தங்குவார்கள். இதேப்போன்று தான் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில், கமான் சந்திப்பு அருகே பல தொழிலாளர்கள் சாலையோரம் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.


 கட்டுமானம், சிறு வியாபாரம் போன்ற பல்வேறு கூலித்தொழில் மேற்கொள்ளும் இவர்கள் காலை முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பணிகளுக்குச் சென்று விட்டு இரவு நேரத்தில் சாலையோர குடிசைப்பகுதிக்குத் தங்க வருவார்கள். வழக்கம் போல் தங்களது பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் தூங்கிய இவர்கள் மீது, அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சாலையோரத்தில் அமரந்திருந்த 4 பேர் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.





இதனையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த போலீசார், விபத்துக்குக் காரணமானவர்கள் யார்? என விசாரணை நடத்த ஆரம்பித்தனர். அதில் நேற்று காலை 5.30 மணியளவில் கரீம்நகர் பகுதி வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசைப்பகுதிக்குள் மோதியது எனவும், இதனை 18 வயதிற்குக் குறைவான சிறுவன் குடி போதையில் கார் ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரியவந்ததும், தன்னுடைய மகனைத் தப்பிக்க வைப்பதற்காக, சிறுவனின் தந்தை தான் கார் ஓட்டியதாக போலீசாரிடம் சரணடைந்துள்ளார். ஆனால் இதில் உண்மை இல்லை என்பதை அறிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மகனைக்காப்பாற்றுவதற்காக பொய் சொன்னது தெரியவந்தது. இதனையடுத்து  கார் விபத்திற்குக் காரணமாக சிறுவன் உட்பட 4 பேர் மீது 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.





முன்னதாக, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கக்கோரி ஏழை குடும்பங்களைச்சேர்ந்த உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விபத்தில் உயிரிழந்தவர்கள் சுனிதா, லலிதா மற்றும் ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இறந்த ஒருவரின் உடலை மட்டும் அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.