விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் ஓட்டுநர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

விழுப்புரம் அடுத்த பக்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 32). இவர் சொந்தமாக மினிவேன் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மோகனபிரியா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ரஞ்சித்குமாருக்குத் தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் கடந்த சில காலமாகவே கடுமையான வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்துள்ளார்.

மீன் குழம்பு சாப்பிட்ட பின் நேர்ந்த விபரீதம்:

இந்நிலையில், நேற்று முன்தினம் ரஞ்சித்குமாரின் வீட்டில் 'கிளிச்சை மீன்' வாங்கி குழம்பு வைத்துள்ளனர். அதனை ரஞ்சித்குமார் மதியமும், இரவும் ஆசையோடு சாப்பிட்டுள்ளார். இரவு உணவு சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே, ரஞ்சித்குமாருக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கடுமையான வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டு அவர் நிலைகுலைந்து போனார்.

Continues below advertisement

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மரணம்:

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ரஞ்சித்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக வளவனூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றனர். அங்கு ரஞ்சித்குமாரைப் பரிசோதித்த அவசரப்பிரிவு மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அழுகுரலையும் ஏற்படுத்தியது.

போலீசார் வழக்குப்பதிவு:

இது குறித்து உயிரிழந்த ரஞ்சித்குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது மரணத்திற்குக் காரணம் மீன் குழம்பில் ஏற்பட்ட நஞ்சா (Food Poisoning)? அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த வயிற்று வலி மற்றும் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட உள் உறுப்புக் கோளாறா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.