பணம் கேட்டு மிரட்டல்
சென்னை அம்பத்துார் பேருந்து நிலையம் அருகே கணினி பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் ஷேக் முகமது அலி (வயது 40). இவர் மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலராக பொறுப்பு வகிக்கிறார். கடந்த 21 - ம் தேதி தொடர்பு கொண்ட திருமுல்லைவாயலைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 40 ) என்பவர் தான் மாநகராட்சி உதவி கமிஷனராக இருப்பதாகவும் அம்பத்துாரில் மேயர் பிரியா பங்கேற்கும் நிகழ்ச்சியின் செலவுக்கு , 10,000 ரூபாய் தர வேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
மேயர் நிகழ்ச்சி பொய்
அதிர்ச்சி அடைந்த ஷேக் முகமது அலி , பிரகாஷின் கூட்டாளியான பர்னபாஸ் ( வயது 48 ) என்பவரிடம், 2,000 ரூபாய் கொடுத்துள்ளார். மேயர் நிகழ்ச்சி நடப்பதாக பிரகாஷ் கூறியது பொய் என தெரிந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதோடு, பிரகாஷ் மற்றும் பர்னபாஸை அம்பத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் மோசடியில் ஈடுபட்ட இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருமணம் செய்ய காதலன் மறுப்பு. 7 - வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா ( வயது 25 ) , வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையைச் சேர்ந்த தர்ஷன் ( வயது 26 ) என்பவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிப்ரவரி 12ம் தேதி கிரீம் சென்டர் என்ற ஹோட்டலில் , இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஹர்ஷிதாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என தர்ஷன் கூறியுள்ளார்.
காதலன் கண் முன்னே குதித்து தற்கொலை
இந்நிலையில் , ஹர்ஷிதா தன் அக்கா கணவர் பிரபுல் ( வயது 37 ) வழக்கறிஞர் ராஜேஷ் ( வயது 42 ) ஆகியோரை அழைத்துக் கொண்டு தர்ஷன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஹர்ஷிதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தர்ஷனிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் தர்ஷன் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர், அக்குடியிருப்பின் ஏழாவது மாடிக்கு சென்று அங்கிருந்து காதலன் தர்ஷன் கண் முன்னே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.