மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பாக கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் மின் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில், போலீசார் சாமர்த்தியமாக சிகரெட் கொடுத்து அவரை கீழே இறக்கினர்.

Continues below advertisement

டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு எதிரே மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அரை நிர்வாண நிலையில் (சட்டை அணியாமல்) திடீரென அந்த டிரான்ஸ்பார்மர் மீது மளமளவென ஏறினார்.

அவர் மேலே ஏறி அமர்ந்து கொண்டு கத்தத் தொடங்கியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.

Continues below advertisement

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், டிரான்ஸ்பார்மர் மீது இருந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் டிரான்ஸ்பார்மர் ஏறியதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் ஆக்ரோஷமாகக் கத்தினார். செம்பனார்கோயில் பகுதியில் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், செம்பனார்கோயில் போலீசார் அவரது ஆட்டோவைப் பறிமுதல் செய்துள்ளனர். தனது வாழ்வாதாரமான ஆட்டோவை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கஞ்சா போதையும்... போலீசாரின் சிகரெட் 'தாஜாவும்'

மணிகண்டன் கடுமையான கஞ்சா போதையில் இருந்ததால், போலீசார் எவ்வளவு சொல்லியும் அவர் கீழே இறங்க மறுத்து அடம் பிடித்தார். தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அருகே செல்ல முயன்றபோது, அவர் குதிக்கப் போவதாக மிரட்டினார். சுமார் ஒரு மணி நேரமாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை.

அப்போது, மணிகண்டன் தனக்கு சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், அவருக்குப் பிடித்தமான சிகரெட் ஒன்றை வரவழைத்து, அதைக் காட்டி கீழே வருமாறு 'தாஜா' செய்தனர். சிகரெட் ஆசையில் அவர் இறங்கி வர அவரை பாதுகாப்பாகப் பிடித்து கீழே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிவதும் தெரியவந்தது.

போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு

இந்தச் சம்பவத்தின் போது, மயிலாடுதுறை காவல் நிலையம் முன்புள்ள சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போதை ஆசாமியின் இந்த 'அட்ராசிட்டியால்' சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

மீட்கப்பட்ட மணிகண்டனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். "போதை தலைக்கேறிய நிலையில் உயிரைப் பணையம் வைத்து இளைஞர் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. உரிய விசாரணைக்குப் பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.