மயிலாடுதுறையில் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நீடூரை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் இக்காமா சாதிக் பாட்ஷா உள்ளிட்ட இருவரை செம்பனார்கோவில் காவல்துறையினர் கைது செய்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


அமெரிக்காவில் விவாகரத்து பெற்ற தம்பதி


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவில் வசித்து வருபவர் 76 வயதான ஹிதயத்துல்லா. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். நான்கு பேரும் திருமணமாகி தனிதனியாக வசித்து வருகின்றனர். இவரது மூன்றாவது மகன் ரிஸ்வான் என்பவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இப்ராஹிம் மகள் ரமீஸ்பர்வீன் என்பவருடன் கடந்த 2014 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரிஸ்வான்- ரமீஸ் பர்வீன் இருவரும் அமெரிக்க நாட்டின் வசித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்கா நாட்டின் முறைப்படி அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். 




இஸ்லாமியர்கள் முறைப்படி விவாகரத்து 


ரமீஸ் பர்வீனுக்கு நஷ்ட ஈடாக இவர்கள் வசித்து வந்த அமெரிக்கா யூ.எஸ் டாலர் 50 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்பில் 42 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த மே 08-ம் தேதி அன்று அரங்ககுடியில் உள்ள ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் விவகாரத்து கொடுக்கப்பட்டது. முஸ்லிம் மத முறைப்படி நீடூரில் பத்வாவும் வாங்கிவிட்டனர். அதனைத் தொடர்ந்து ரமீஷ் பர்வீனுக்கு திருமணத்தின் போது செய்யப்பட்ட 40 சவரன் தங்க நகையை ரமீஸ் பர்வீனிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டது. 


மிரட்டல் விடுத்த இக்காமா சாதிக் பாட்ஷா 


இந்த சூழலில் மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளரான இக்காமா சாதிக் பாட்ஷா என்பவர் இந்த விவாகரத்து தொடர்பாக ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும். பணம் கொடுக்க வில்லை என்றால் முட்டி போட வைத்து பணத்தை பெறுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 




காவல் துறையினர் விசாரணை 


இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஹிதயத்துல்லா புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இக்காமா சாதீக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஐயூப்கான் ஆகிய இருவரை கைது செய்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து செம்பனார்கோவிலில் உள்ள தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் இருவருரையும் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் 


இக்காமா சாதிக் பாட்சா மீது கொலை முயற்சி, வழிபறி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20 வழக்குகள் இதுவரை போடப்பட்டுள்ளது. கடந்த 2022 -ஆம் ஆண்டு காவல்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது கைது செய்யப்பட்ட இக்காமா சாதிக் பாட்சா மீது போடப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்க மாற்றப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளரான இக்காமா சாதிக் பாட்சா ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக இக்காமா சாதிக் பாட்சா வசிக்கும் நீடூர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த இக்காமா பாஷா


மயிலாடுதுறை மாவட்டம், நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 40 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். மேலும் சாதிக்பாஷா, தனது இக்காமா என்ற தற்காப்பு கலை அகாடமியில் தற்காப்பு கலை கற்க வந்த பலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கு உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டதற்கு ஆளானவர்.