மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்குடன் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் தீவிர வேட்டையின் விளைவாக, சுமார் 3.300 கிலோகிராம் கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு வாகனத் தணிக்கையில் சிக்கிய கடத்தல்காரர்கள்
மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை பொறையார் அருகேயுள்ள ஆத்துப்பக்கம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மூன்று இருசக்கர வாகனங்களில் அப்பகுதியில் வந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை மறித்து சோதனையிட்டபோது, அவர்கள் சட்ட விரோதமாகக் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிப்பட்டவர்கள் காரைக்கால் தலத்தெருவை சேர்ந்த ரவி என்பவரது மகன் 26 வயதான சக்தி (எ) ரஜினி சக்தி, காரைக்கால், கோட்டுச்சேரி, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் 19 வயதான விக்னேஷ் (எ) ஹரிஹரன், காரைக்கால்,நேரு மார்க்கெட் வீதியை சேர்ந்த சசிகுமார் என்பரது 19 வயதான மகன் ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
பறிமுதல்
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 3.300 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சாக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பின்வரும் மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன . HONDA SHINE (பதிவெண் PYO2 R 8431), பதிவெண் இல்லாத HONDA SHINE, TVS VEGA இந்தச் சம்பவம் தொடர்பாக, பொறையார் காவல் நிலையத்தில் வழக்கு எண் 548/25-ன் கீழ், NDPS சட்டப்பிரிவு 8 (C) r/w 20 (ii) (B)-ன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூவரையும் நீதிமன்றக் காவலில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோதக் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 412 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து இதுவரை மொத்தம் சுமார் 35.053 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 03 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், காவல்துறைக்குத் தெரிவிக்க பின்வரும் எண்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
* இலவச உதவி எண்: 10581
* அலைபேசி எண்: 96261-69492