மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Continues below advertisement

குற்றவாளிகள் கண்காணிப்பு மற்றும் வழக்கு விசாரணை

கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் தற்போதைய நடத்தை குறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மேலும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யவும், திருடுபோன சொத்துக்களை விரைவில் மீட்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளைத் துரிதப்படுத்தி, தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Continues below advertisement

சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி

சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். மணல் கடத்தல், சூதாட்டம் மற்றும் லாட்டரி விற்பனை போன்ற குற்றச்செயல்களைத் தடுக்க தீவிர சோதனைகளை மேற்கொள்ளவும், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு

மாவட்டத்தின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

*விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: மாவட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் தினசரி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

* சிசிடிவி கேமராக்கள்: பொது இடங்கள் மற்றும் குடியிருப்புகளில் புதிய கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*போக்குவரத்து சீரமைப்பு: மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

காவல் வாகனங்கள் நேரடி ஆய்வு

குற்ற கலந்தாய்வு கூட்டத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் மாதாந்திர ஆய்வு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின், காவல்துறையின் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒளிரும் மின்விளக்குகளின் செயல்பாடு மற்றும் பழுது நீக்கும் கருவிகளின் இருப்பு குறித்து அவர் தணிக்கை செய்தார்.

குறிப்பாக, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகள், போக்குவரத்து குறியீடு பலகைகள் மற்றும் பேரிடர் கால உபகரணங்கள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை அவர் சோதனை செய்து இயக்கவைது சோதனை செய்தார். 

காவலர்களுக்கு அறிவுரை

வாகனங்களை இயக்கும் காவலர்களிடம், வாகனங்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சாலை விதிகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார். வாகனங்களை இயக்கும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவதும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் மூலம் மாவட்டத்தின் காவல் வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ததோடு, அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பாகப் பணியாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊக்கப்படுத்தினார்.