மயிலாடுதுறை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டு, அவரது கடைக்கு மயிலாடுதுறை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் விதமாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சிறப்பு வேட்டையானது அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Continues below advertisement

ரகசியத் தகவலின் பேரில் அதிரடிச் சோதனை

இந்தச் சிறப்பு வேட்டையின் ஒரு பகுதியாக, பாலையூர் காவல் சரகம், கீழப்பரிதிக்குடியில் குட்கா பொருள்கள் விற்பனை தொடர்பாகப் பாலையூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அங்குள்ள ஐஸ்வர்யா மளிகை கடையில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடை உரிமையாளர் கைது மற்றும் கடைக்கு சீல்

இந்தச் சம்பவத்தில், கடையின் உரிமையாளரான கீழப்பரிதிக்குடி, கீழத்தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் 44 வயதான செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Continues below advertisement

சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட அந்தக் கடைக்குச் சீல் வைக்குமாறு பாலையூர் காவல் ஆய்வாளரால் மயிலாடுதுறை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உடனடியாகப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, பாலையூர் காவல்துறையினர் முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சஞ்சய் அந்தக் கடைக்குச் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

651 பேர் கைது, 636 வழக்குகள் பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 651 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 2166 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரிகள் பயன்படுத்திய 14 இருசக்கர வாகனங்களும் மற்றும் 01 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

29 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்

சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்குச் சீல் வைக்க உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்குத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் இதுவரை சுமார் 29 கடைகள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தெரிவித்துள்ளார். குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க அழைப்பு

குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் சம்பந்தமாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்ணிற்குத் தெரிவிக்கலாம் எனவும் அவர்களது விபரம் பாதுகாக்கப்படும் என்பதால் எவ்விதமான அச்சமும் இன்றி இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.