மயிலாடுதுறை: பள்ளிக்குச் சென்ற தங்களது 15 வயது மகளைக் காணவில்லை என குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிறுமியின் பெற்றோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக, உடனடியாகச் சிறுமியை மீட்கத் துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement


சிறுமி மாயமானது எப்படி?


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாஸ்கர் - மகாலட்சுமி தம்பதியினரின் 15 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், மறுநாள் நவம்பர் 4-ஆம் தேதி குத்தாலம் காவல் நிலையத்தில் தங்கள் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர்.


புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு வாரமாகியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.


கடத்திச் சென்றவர் யார்?


இதற்கிடையில், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வக்காரமாரியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மகேஷ் தங்களது மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதாக பெற்றோருக்குத் நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது. தங்கள் மகளைக் கடத்திச் சென்ற நபர் குறித்த இந்தத் தகவலை அவர்கள் உடனடியாகக் குத்தாலம் காவல் நிலையத்திற்கும், மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கும் நேரில் சென்று தெரிவித்தனர்.


ஆனால், கடத்தியவர் குறித்த தகவல் தெரிந்த பின்னரும், காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும், சிறுமி குறித்து எந்தவொரு முன்னேற்றமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.


ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்


காவல்துறையின் அலட்சியம் மற்றும் ஒரு வாரமாக நீடித்த மௌனம் காரணமாக விரக்தியடைந்த பெற்றோர் சுந்தரபாஸ்கர் மற்றும் மகாலட்சுமி, இன்று (நவம்பர் 10) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். தங்கள் மகள் குறித்த தகவலை உடனடியாகத் தெரிவிக்கக் கோரி, கோரிக்கை விளக்கப் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த திடீர் போராட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் குறித்துத் தகவலறிந்த ஆட்சியரக அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட சமரசத்திற்குப் பின்னர், அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.


மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை


ஆட்சியரக அதிகாரிகளின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட பெற்றோர், போராட்டத்தைக் கைவிட்டு, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் தங்களது மகளைக் கடத்தியவர் குறித்த விவரங்களையும், காவல்துறையின் மெத்தனப் போக்கையும் விளக்கி ஒரு மனுவை அளித்தனர்.


பெற்றோரின் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவர்கள் தெரிவித்த தகவல்களைக் கேட்டறிந்து, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார். உடனடியாக அவர் காவல் துறை உயரதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சிறுமி மாயமான விவகாரத்தில் ஒரு வாரமாகியும் நடவடிக்கை எடுக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாகச் சிறுமியை மீட்கவும், கடத்தலில் ஈடுபட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.


மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி உத்தரவு, தங்களுக்குச் சிறுமியை மீட்கும் நம்பிக்கை அளிப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் தலையீட்டைத் தொடர்ந்து, காவல்துறையினர் இனி தீவிர நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.