மயிலாடுதுறையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Continues below advertisement

சம்பவத்தின் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு, கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் புகாரி என்பவரது மகன் 44 வயதான ஷேக்நூருதீன். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோ (POCSO) சட்டம் - 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட ஷேக்நூருதீனை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார்.

Continues below advertisement

குண்டர் சட்டம் பாய்ச்சல்

கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்து சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின், பரிந்துரை செய்தார். இதனைப் பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், ஷேக்நூருதீனை தடுப்பு காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள், சம்பந்தப்பட்ட நபரை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளுக்கு மாவட்ட எஸ்.பி. கடும் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் "பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரவுடித்தனம், கஞ்சா விற்பனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.

நடப்பாண்டில் 50 பேர் மீது நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் விவரங்கள் பின்வருமாறு:

* பொது அமைதிக்குத் தொந்தரவு செய்தவர்கள் - 27 

* திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் - 03 

* மதுவிலக்கு குற்றவாளிகள் - 14 

* போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை - 01 

* பாலியல் குற்றவாளிகள் - 05 

என மொத்தம் - 50 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 47 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், இந்த ஆண்டு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் சமூக விரோதிகளாகக் கருதப்பட்டு அவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.