மயிலாடுதுறை: சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், பல நேரங்களில் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறிக்கும் எமனாக மாறிவிடுகின்றன. அதற்குச் சாட்சியாக, மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் ஓட்டி வந்த அதிவேகத் திறன் கொண்ட இருசக்கர வாகனம் மோதி, கல்லூரி கேண்டின் உரிமையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சம்பவம் என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (75). இவர் மன்னம்பந்தலில் உள்ள பிரபல ஏ.வி.சி (AVC) தனியார் கல்லூரியில் கேண்டின் நடத்தி வந்தார். கடந்த 28-ஆம் தேதி, தனது பணி முடிந்ததும் வழக்கம்போல கல்லூரியிலிருந்து பாலவெளியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் அவர் சென்று கொண்டிருந்தார். தனது வீட்டின் அருகே வந்தபோது, சாலையின் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாகத் திரும்புவதற்கு அவர் முயன்றுள்ளார். அந்தச் சமயம், அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாக வீராசாமியின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

Continues below advertisement

தூக்கி வீசப்பட்ட முதியவர்  

மோதிய வேகத்தில் வீராசாமி காற்றில் தூக்கி வீசப்பட்டு, பல அடி தூரத்தில் சாலையில் விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார் உழைத்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு முதியவர், கண் இமைக்கும் நேரத்தில் சாலை விபத்திற்குப் பலியானது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இந்த விபத்து குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது ஏ.வி.சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (18) என்ற மாணவர் என்பது தெரியவந்தது.

அவர் ஓட்டி வந்தது சாதாராண வாகனம் அல்ல; அதிவேகத் திறன் கொண்ட Yamaha R15 ரக 'ஸ்போர்ட்ஸ் பைக்'. சாலையில் அந்த மாணவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைரலாகும் சிசிடிவி காட்சி

இந்த விபத்தின் கோரத்தை அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் துல்லியமாகப் பதிவாகிள்ளது. அந்த வீடியோவில், முதியவர் மெதுவாகத் திரும்புவதும், பின்னாலிருந்து புயல் வேகத்தில் வரும் பைக் அவர் மீது மோதி இருவரையும் தூக்கி எறிவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்க்கும் எவரும் ஒரு நிமிடம் பதைபதைத்துப் போகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: "இன்றைய இளைஞர்கள் தங்களது வீரத்தைக் காட்ட சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிவேகத் திறன் கொண்ட வாகனங்களை ஓட்டும் மாணவர்கள், சாலையின் விதிகளை மதிப்பதே இல்லை. குறிப்பாகக் கல்லூரிப் பகுதிகளில் இத்தகைய வேகக் கட்டுப்பாடற்ற வாகன ஓட்டிகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. "மேலும், விபத்து நடந்த மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உடனடியாகப் போதிய வேகத்தடைகளை (Speed Breakers) அமைக்க வேண்டும் என்றும், கல்லூரி மாணவர்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை காவல்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிவேகம் எப்போதும் ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது. ஒருவரின் வேகம், இன்னொருவரின் வாழ்நாள் பயணத்தையே முடித்துவிட்ட சோகம் இப்பகுதியில் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.