மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான சிவகுமார் . இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்கின்ற 40 வயது உடைய ஞானகந்தன், நண்பர்களான இருவரும் கட்டிடங்களில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது போது இருவருக்கும் இடையே எதிர் பாராத விதமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த நேற்று பாண்டூர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமரசம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருவருக்கும் இடையே மேலும் வாக்கு வாதம் ஏற்பட்டதில் சந்துரு திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவகுமாரின் வலது பக்க காதை கடித்து துண்டாக துப்பியுள்ளார். இதைப் பார்த்த சிவக்குமாரின் உறவினர் கார்த்திகேயன் தடுக்கும் முற்பட்டுள்ளார், அவரையும் சந்துரு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் கார்த்திகேயனுக்கு தலையில் தையல் போடப்பட்டது.
சிவகுமாருக்கு காது துண்டானதால் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக கார்த்திகேயன் குத்தாலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குத்தாலம் காவல்துறையினர் சந்துருவை கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் சக தோழன் கோபத்தில் காதை துண்டாக கடித்து எடுத்த சம்பவம் குத்தாலம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி, அடிதடி பிரச்சனைகள் என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற பல சிக்கல்கள் உருவாகின்றன சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.