சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பெண் மாணவிகளுக்கு பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 14ந் தேதி காது கேளாதோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில், இந்த புகாரின் பேரில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்றி மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடிய காதுகேளாதோர் சங்கத்தினர் பாலியல் சீண்டல்களுக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்ய கோரியும் அவர்களை பணி நீக்கம் செய்யக் கோரியும் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் பள்ளி வரை பேரணியாக சென்றனர். அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தினர் மற்றும் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி. கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களிம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மானாமதுரை டி.எஸ்.பி. கண்ணன் மானாமதுரை தாசில்தார் சாந்தி ஆகியோர் விசாரணை செய்தனர்.
விசாரணையின் முடிவில் இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியரான ஆல்பர்ட் ஆபிரகாம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாகவும் மற்றும் காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டி.எஸ்.பி. கண்ணன் கூறும்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. கண்ணன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி நல் அலுவலர் கூறும்போது, இந்த பள்ளியில் கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இங்கு பணிபுரிந்த ஆல்பர்ட் ஆபிரகாம் மீது புகார் உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவிகளுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்த ஆசிரியர் மீது புகார் இருந்ததாக தெரிவித்தார். மேலும், இதில் இரு ஆசிரியர்கள் என்ற குற்றச்சாட்டு என்பது தற்போது ஒரு ஆசிரியர் மட்டும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி செல்லும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்