கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை அவரது சித்தப்பா வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள தலக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுபிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கார்பெண்டர் வேலை பார்க்கும் அருண் பிரசாத்தை காதலித்து தான் சுபிதா திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 9 வயதிலும், 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே புயல் வீச தொடங்கியது.
சுபிதாவுக்கும் தும்பவிளை பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி கன்னியாகுமரி பகுதியில் சந்தித்து தனிமையில் நேரம் செலவிட்டு வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் அருண் பிரசாத்துக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவி சுபிதாவை அழைத்துக் கண்டித்துள்ளார். எனினும் ரகசிய தொடர்பு கள்ளக்காதலாக மாறி சுபிதா, அனீஸ் பழக்கம் மேலும் நெருக்கமானது. இதன் காரணமாக அருண் பிரசாத், சுபிதா இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சுபிதா தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் நாகர்கோயிலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதேசமயம் இரு மகன்களும் அருண் பிரசாத் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணவரை பிரிந்து, மகன்களும் இல்லாமல் தனிமையில் இருக்கிறோம் என்ற கவலை இல்லாமல் சுபிதா இருந்துள்ளார். அவர் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி அனீஷை சந்தித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனீஸ் உடன் சுபிதா நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். இதனைப் பார்த்த அவரது சித்தப்பா ராஜேஷ் என்பவர் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என சுபிதா கூற இருவருக்குள்ளும் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுபிதா மாற்றுத்திறனாளி என்று பாராமல் ராஜேஷை பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் ஆத்திரமடைந்து அங்கிருந்த அரிவாளை எடுத்து சுபிதா தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் அலறி துடித்த சுபிதா ஓடிப்போய் தனது படுக்கையறை கதவை பயத்தில் மூடிக்கொண்டார். இந்த நிலையில் படுகாயத்துடன் உள்ளே சென்ற சுபிதா நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுபிதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது சித்தப்பா மாற்றுத்திறனாளியான ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
