புதுச்சேரியில் முழு முடக்கம் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டன, அதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சிலர் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணணுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் மரக்காணம் அருகே கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி லோகநாதன் என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டு பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் 30 லிட்டர் கொள்ளவு கொண்ட 26 கேன்களில் 780 லிட்டர் எரி சாராயம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடைத்து அவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து மரக்காணத்தில் உள்ள மது விலக்கு அமலாக்கப்பிரிபு மையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த எரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்த சாராய வியாபாரி லோகநாதன், அவரது மனைவி புஷ்பா, மற்றும் தாழங்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவர் தலைமறைவு ஆகினர். அவர்களையும் தேடி வருகின்றனர். மேலும் சாராயம் எங்கிருந்த எடுத்து வரப்பட்டது. யார் இதை அனுப்பியது. இது போல் இப்பகுதியில் யார், யார் சாராயம் விற்பனை செய்துவருகின்றனர் என்று தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர் . இங்கு பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ 1.5 லட்சம் இருக்கும் என்று போலீசார் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் இது போன்ற கள்ளச்சந்தை விற்பனை களைகட்டியது. இதன் மூல் பெரியஅளவில் வருவாய் ஈட்டி செட்டில் ஆனவர்களும் உண்டு. ஊரடங்கு பலதரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் போது, இது போன்றவர்களுக்கு பயனித்திருக்கிறது. அதனால் தான் கள்ளச்சாரயம் விற்போர் ஊரடங்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் அதிக அளவில் மதுவின் தேவை இருப்பதாகவும், அதை வைத்து தமிழகம்-புதுச்சேரி எல்லையில் கள்ளசந்தை மது விற்பனை செய்ய பெரிய அளவில் ஒரு தரப்பினர் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தை உணர்ந்து சம்மந்தப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.