நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தானமாரிமுத்து என்பவரின் மகன் பிரவின்குமார் 31. இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா காவல் நிலையத்தில் கடந்த 2 வருடங்களாக  காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை மன்னார்குடி அருகே நாலானல்லூர் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மரத்தில் பிரவீன்குமார் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார். 

 

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் குமார் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

இம்மாதம் 28 ஆம் தேதி காவலர் பிரவீன்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் இவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் காவலர் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்த காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டு போது கடந்த ஒரு வார காலமாக பிரவீன் குமார் சோகமாக இருந்து வந்ததாகவும் நேற்று அவர் விடுமுறையில் இருந்ததால் காவல் நிலையத்திற்கு வரவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். பிரவீன் குமார் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050