கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் கடந்த ஜனவரி 12 அன்று செல்ஃபோனைத் திருடிச் சென்றவரை 10 நிமிடங்களில் பிடித்ததோடு, கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மங்களூரின் பாபுகுட்டா அட்டாவர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சாமந்த் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்துள்ள மங்களூர் காவல் ஆணையர் சஷி குமார், `கடந்த ஜனவரி 12 அன்று, நண்பகலின் போது, நேரு மைதான் அருகில் இரண்டு நபர்கள் கத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த சாலைப் போக்குவரத்துக் காவலர்கள் இவர்களைக் கண்ட பிறகு, அவர்களைத் துரத்தியதோடு, அவர்களுள் ஒருவரைப் பிடித்தனர். விசாரித்ததில் அப்பகுதியில் இருந்த கிரானைட் தொழிலாளர் ஒருவர் தான் நேரு மைதான் அருகில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாகவும், அப்போது மூன்று பேர் அங்கு வந்து அவரின் செல்ஃபோனைத் திருடிக் கொண்டு ஓடியதாகவும் தெரிவித்தார். காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட நபர் 20 வயதான சாமந்த் எனத் தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், `பிடிபட்ட நபர் சாமந்தை விசாரித்ததில் அவரோடு 32 வயதாக ஹரிஷ் பூஜாரி என்பவரும், ராஜேஷ் என்பவரும் திருடியதாகக் கூறியுள்ளார். உடனே காவல்துறையினர் ரயில் நிலையத்திலும், ஹம்பன்கட்டா பகுதியிலும் தேடியதில் ஹரிஷ் பூஜாரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் என்ற மூன்றாவது குற்றவாளி தலைமறைவாக இருக்கிறார். தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
காவல் ஆணையர் சஷி குமார் தொடர்ந்து செல்ஃபோனைத் திருடிய குற்றம் நிகழ்ந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முனைப்பு காட்டிய காவலர் வருணின் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
குற்றவாளிகளிடம் இருந்து காவலர்கள் சாம்சங் செல்ஃபோன் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணை நடைபெற்று வருகிறது.