கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கதொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.


 

இந்த தகவலை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சோதனை செய்ததில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பது தெரிய வந்தது.

 

அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்க தொட்டியில் இருக்கும் நீரை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

 

 இந்த நீரை குடிநீராக இப்பகுதியை சுற்றி இருக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தியுள்ளதால் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மகன் சரவணகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக உறவினர்கள் அவரைத் தேடி வந்துள்ளனர்.

 

இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன சரவணகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.