குஜராத்தில் மனைவி மீதான ஆத்திரத்தில் இரண்டரை வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

Continues below advertisement

இந்த கொடூர சம்பவமானது குஜராத்தின் வாவ்-தரத் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சுய்காம் என்ற இடத்தில் அசோக் ராவல் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே சமீபகாலமாக கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் ராவல் மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 

இதனால் தனது இரண்டரை வயது மகனை தனியாக வளர்க்கும் நிலையில் அசோக் ராவல் தள்ளப்பட்டார். இது அவருக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. குழந்தையின் செயலை புரிந்துக் கொள்ள முடியாமல் ஆத்திரத்திலும், மன அழுத்தத்திலும் தந்தையான அசோக் ராவல் தன் கொடூர முகத்தை காட்டியுள்ளார். அதாவது குழந்தை அடம்பிடிக்கும் நேரங்களில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். 

Continues below advertisement

இப்படியான நிலையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 13) அன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் அசோக் ராவல் அவரது இரண்டரை வயது மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது.  இதனையடுத்து வலியில் அலறிய அச்சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அவனை அசோக் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் அந்த குழந்தை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து அசோக் ராவல் தன் உறவினர்களுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை அங்குள்ள இடுகாட்டில் புதைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அசோக் ராவலின் மாமா பாபுபாய் ராவலுக்கு தெரிய வந்தது. அவர் தன் மருமகன் செயலால் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுய்காம் காவல் நிலையத்தை அணுகி அசோக் மீது புகார் தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். மேலும் போலீசாரின் ஒரு குழு நேராக இடுகாட்டுக்கு சென்று குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அசோக் ராவலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இறப்பதற்கு முன்பு படுகாயங்களுடன் கட்டிலில் அமர்ந்திருந்த அந்த சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசோக் ராவல் மீது குழந்தை மீதான வன்கொடுமை, கொலை, குற்றங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி பிஞ்சு குழந்தைகளை இப்படியெல்லாம் வதைக்க மனசு வருகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.