போதையில் உளவுத்துறை டி.எஸ்.பியிடம் வம்பிழுத்த ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு தலைநகரான சென்னையில் தொடர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இக்குற்றங்களுக்கு மது உள்ளிட்ட போதை பொருட்கள் அடிப்படையாக இருந்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.


திரைப்படம் ஒன்றில் வடிவேல் போலீஸ் அதிகாரியிடம் வாண்டடாக வம்பிழுப்பார். அதற்கு போலீஸ் எவ்வளவோ அமைதியாக இருந்தும் வடிவேல் அடங்கமாட்டார். பின்னர் அவர் போலீஸ் என்று தெரிந்ததும் தர்ம அடி வாங்குவார். அதேபோன்று ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 


மது போதையில் உளவுத்துறை டி.எஸ்.பியிடம் ஆசாமி ஒருவர் வம்பிழுத்துள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. டி.எஸ்.பி அருளரசு ஜஸ்டின் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக மயிலாப்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கே வந்த ஆசாமி ஒருவர், டி.எஸ்.பியின் காரை ஓரமாக நிறுத்த சொல்லி மிரட்டியுள்ளார்.


கார் ஏற்கெனவே ஓரமாகத்தான் நின்றுகொண்டிருந்தது. ஆனால் அதனை இன்னும் ஓராமாக நிறுத்தச் சொல்லி ஆசாமி மிரட்டியுள்ளார். அப்போது கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய டி.எஸ்.பி, என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளார்.


உடனே போதை ஆசாமி, '“எங்க  ஏரியாவுல வந்து என்கிட்டயே பிரச்னை பண்றியா?” என்று சத்தமிட தொடங்கியுள்ளார். இதனையடுத்து அந்த ஆசாமி மது போதையில் இருந்தது தெரிய வரவே அங்கிருந்து டிஎஸ்பி  நகரத் தொடங்கினார்.


ஆனால் அவரை நகர விடாத ஆசாமி, எதிர்பாராத நேரத்தில் டிஎஸ்பி கண்ணத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் நிலைக்குலைந்து போன அவர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர் போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.


விசாரித்ததில் போதை ஆசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வரும் பிரின்ஸ் பேட்ரிக் என்பதும், தனியார் நிறுவனத்தில் பவுன்சராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.


இவரின் சொந்த ஊர் மதுரை என்பதும், தல்லாக்குளம் மற்றும் செல்லூர் காவல் நிலையங்களில் இவர் மீது அடிதடி வழக்குகள் சில நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்தது.


இதனையடுத்து போதை ஆசாமி பிரின்ஸ் பேட்ரிக் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


குடிபோதையில் தொடர் குற்றங்கள் நிகழ்ந்து வருவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. அதேபோல குற்றங்களுக்கான முக்கியக் காரணங்களாக மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண