சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ஜாபர் உசேன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் நள்ளிரவு தப்பிக்க முயன்றபோது என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் தரமணி பகுதியில் ஜாஃபர் குலாம் ஹுசைனை திருவான்மியூர் காவல் ஆய்வாளர் என்கவுண்டர் செய்தார்.
சென்னையில் தொடர் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. 8 க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சரியாக 6 மணியிலிருந்து 7 மணிவரை மட்டுமே இந்த செயின் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். ஒரு மணி நேரம் மட்டுமே இதை செய்து விட்டு மும்பை அல்லது ஹைதராபாத்துகு விமானம் மூலம் தப்பி செல்வது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய பொலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக ஜாஃபர் குலாம் ஹுசைன், சூரஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் ரயில் மூலம் தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்தது. அதன்படி ரயில்வே போலீசாரை அலெர்ட் செய்து ஆந்திர பிரதேசம் நெல்லூரில் அவரை கைது செய்து சென்னை அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வழிப்பறி செய்யப்பட்ட நகைகள் எங்கு இருக்கிறது என போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தரமணி அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிந்தது. இதையடுத்து ஜாஃபர் ஹுசைனை அழைத்துக்கொண்டு நகையை மீட்க போலீசார் சென்றுள்ளனர்.
அங்கே ஏற்கெனவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளத்துப்பாக்கி மூலம் போலீசாரை சுட முயற்சி செய்துள்ளார் ஜாஃபர் ஹுசைன். ஆனால் தற்காப்புக்காக திருவான்மியூர் காவல் ஆய்வாளர் அவரை என்கவுண்டர் செய்துள்ளார்.
ஏற்கெனவே மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாஃபர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.