செல்ஃபோன் சார்ஜர் வெடித்து வீடு முழூவதும் தீ பரவி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். பட்டதாரியான அர்ஜுன் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.19) இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தன் தாயின் வீட்டில் விட்டு தன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் அர்ஜூன்.
அப்போது வீட்டில் அவரது மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கிக் கொண்டிருந்ததை அடுத்து அருகே இருந்த தகர வீடு ஒன்றில் அர்ஜூன் தூங்கியுள்ளார். தினமும் தான் தூங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை அர்ஜூன் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் இவரது செல்போன் சார்ஜர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. தொடர்ந்து தீ குடிசையில் மளமளவெனப் பரவியுள்ளது.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவி கஸ்தூரியும், அருகில் இருந்தவர்களும் வருவதற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு அர்ஜூன் பரிதாபமாக இரையானார். காவல் துறையினர் முன்னதாக நடத்திய விசாரணையில் செல்போன் சார்ஜர் வெடித்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் கடந்த ஆண்டு கோவை மாவட்டம், மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம் என்பவர் சார்ஜர் வெடித்து உயிரிழந்த சம்பவம் நடந்தது. 18 வயதான இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் கடந்த 9ஆம் தேதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் செல்போனை சார்ஜ்ஜில் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.
மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த செல்போன் திடீரென்று வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க வழக்கமாக தூங்கச் செல்வதற்கு முன் சார்ஜ் போடாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்