NEET Exam: மகாராஷ்டிராவில் நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக, 17 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளை அடித்துக் கொன்ற தந்தை:

பல மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது கனவாகும். ஆனால், அதனை உண்மையாக்கி 10ம் வகுப்பில் 92.60 சதவிகித மதிப்பெண்களை பெற்ற மாணவி, ஒரு வருட இடைவெளியில் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் பெற்ற தந்தையாலே அடித்துக் கொள்ளப்பட்டுள்ளார். மகாராஷ்ட்ராவின் சங்லி பகுதியை சேர்ந்த சாத்னா போன்ஸ்லே, நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்தார். அதுதொடர்பாக அண்மையில் மாதிரி தேர்வு ஒன்றையும் எழுதியுள்ளார். இதில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஆத்திரமடைந்த சாத்னாவின் தந்தையான தொண்டிராம் மகளை கடுமையாக தாக்கியுள்ளார். இவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

தேர்வு முடிவுகள் வெளியாகி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதை அறிந்ததுமே, கம்பு கொண்டு தனது 17 வயது மகளை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சாத்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே, குற்றத்தை ஒப்புக்கொண்ட தொண்டிராமை போலீசார் கைது செய்துள்ளனர். தந்தை தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த சாத்னாவை சங்க்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விளக்கம்:

மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் ஆத்திரமடைந்து தனது கணவர் தாக்கியதில், மகள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கடந்த 22ம் தேதி மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தொண்டி ராம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றும், நல்ல மதிப்பெண்களை பெற முடிய்வைல்லை என்றும் மற்றும் நீட் தேர்வுக்கு பயந்தும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களை யாராலும் மறக்க முடியாது. ஆனால், படித்து ஆசிரியராக உள்ள ஒருவரே, ஒரு மாதிரி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்ற மகளை அடித்துக் கொன்ற சம்பவமும் சற்றும் ஏற்க முடியாததாக உள்ளது. உயிரை விட படிப்பு முக்கியமா? பெற்ற மகளை காட்டிலும் மதிப்பெண்கள் முக்கியமா? என ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

தங்களது விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணித்து, அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என ஆத்திரம் கொள்ளும் பெற்றோர் இன்னும் இந்த சமூகத்தில் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாகவே மகாராஷ்டிரா சம்பவம் அரங்கேறியுள்ளது. பிள்ளைகளை அவர்களது விருப்பம்போல் கல்வி பயில விடுவதே, நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக தோல்வியுறும்போது தட்டிக் கொடுப்பதே பெற்றோருக்கு அழகு.