தொப்பூர் அருகே மினி கன்டைனர் வாகனத்தில் ரகசிய அறை அமைத்து தக்காளி கூடைகளை வைத்து மறைத்து 3 லட்சம் மதிப்புள்ள 326 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு தொப்பூர் காவல் துறையினர் கட்டமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த மினி கண்டைனர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்துள்ளார். இந்த வாகனத்தை காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்த பொழுது ஓட்டுனர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார். மேலும் தான் சேலம் மார்க்கெட்டில் தக்காளிலோடு ஏற்ற செல்கிறேன் என பதில் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக வாகனத்தின் உள்ளே உடைந்த தக்காளி கூடைகளை வாகனம் முழுவதும் அடுக்கி வைத்து வந்துள்ளார். ஆனால் காவல் துறையினருக்கு  சந்தேகத்தின் ஏற்பட்டுள்ளது. 

 



 

 

தொடர்ந்து வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது கண்டைனர் உள்ளே ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை திறந்து பார்த்த பொழுது ரூ. 3 இலட்சம் மதிப்பில் 51 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடத்திவரப்பட்ட சுமார் 326 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் மினி சரக்கு வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில்,  குட்கா பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. ஆனாலும் காவல் துறையினர் தொடர் சோதனையில் கடந்த ஒரு வாரமாக குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். 

 



 

தருமபுரி அருகே லாரி ஓட்டுநரிடம் பணம், செல்போன் பறித்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 



 

 

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அடுத்த தடங்கம் அருகே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோட்டில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணிக்கு, சேலத்தில் இருந்து ஈச்சர் வண்டியில் பார்சல் எடுத்து வந்த வாகன ஓட்டுநர் வேலு(42) என்பவர் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த மூன்று நபர்கள் சுமார் ஆயிரம் ரூபாய் பணத்தையும், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர்  வந்து புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். அப்பொழுது மேம்பால பகுதியில் சுற்றி திரிந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தருமபுரி அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்த சக்திகுமார்(19), ஜெயசூர்யா(24), சையத் மன்சூர்(22) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனை தொடர்ந்து மூவரையும் அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி பகுதியில் தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவம் அதிகரித்து வருவதாக மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.