கோவையில் ஊரடங்கில் வேலை பறிபோனதை காரணமாகச் சொல்லி, வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதனால் ஊரடங்கு விதிமுறைகளில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவதில்லை. மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட போதும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால் குடிகாரர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கூடுதல் விலைக்கு மது வாங்குதல், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மது கடத்தி வருதல், போதை பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் சிலர் யூடியூப் பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது, விற்பனை செய்வதிலும் இறங்கியுள்ளனர். பல இடங்கில் ஊரடங்கில் தவிக்கும் குடிகாரர்களை குறிவைத்து கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தொழிலாகவும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மோகன் நாயர் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து சாய்பாபா காலணி காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் ஒருவரை அவரது வீட்டிற்கு அனுப்பி சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை சோதனை செய்தனர். அதில் மோகன் நாயர் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின்னர் மோகன் நாயர் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்யும் போது, கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் வீட்டில் சோதனையிட்ட போது குக்கர் மற்றும் மது பாட்டில்களில் சாராயத்தை காய்ச்சி அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து வீட்டில் இருந்த 2 லிட்டர் கள்ள சாராயம், 1.75 லிட்டர் ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மோகன் நாயரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மோகன் நாயர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வந்ததும், ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக இலாபம் பார்க்க திட்டமிட்டதும் தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்தபடி யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்ச கற்றுக்கொண்டு, சாராயம் காய்ச்சி ஒரு லிட்டர் சாராயத்தை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மோகன் நாயரை சாய்பாபா காலணி காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.