ஒரே இரவில் கோடி ரூபாய் கொள்ளை – சிவராத்திரியில் கோவையில் கைவரிசை காட்டிய திருடர்கள்...
கோவை சிங்காநல்லூரில் நகை அடகு கடையில் துணிச்சலான கொள்ளை. 70 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி மாயம் – போலீசார் தீவிர விசாரணை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வந்த நகை அடகு கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பெரும் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த துணிச்சலான கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவராத்திரியில் நகை அடகு கடையில் கைவரிசை
சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் “மகாதேவ்” என்ற பெயரில் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். கடையின் பின்புறத்தில் அவரது குடியிருப்பு அமைந்துள்ளது. நேற்று சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அவர் கடைக்கு விடுமுறை அறிவித்து குடும்பத்துடன் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறத்தில் உள்ள ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ அளவிலான வெள்ளி நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இன்று காலை கடைக்கு வந்த ரமேஷ்குமார், ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதையும், நகைகள் முழுவதுமாக கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையம்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்டும் தடயம்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கடை வளாகம் முழுவதும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் கைப்பற்றப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பண்டிகை நாளில் கடை மூடப்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்காணித்து, கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.























