மதுரை சோழவந்தான் அருகே டூவீலரில் வந்து பட்டா கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த மூன்று இளைஞர்கள் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்துச் சென்ற சம்பவம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கொடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தனியார் பெட்ரோல் பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் திடீரென பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து கைகளில் பெரிய கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியவாறு, பணியில் இருந்த ஊழியர் திருமுருகனை கடுமையாக மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகினார்
இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தப் பயங்கரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய இளைஞர்களைத் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் உத்தராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோழவந்தான் அருகே குருவித்துறை மலை பகுதியில் குற்றவாளிகள் சுற்றித்திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைக்க முற்பட்டபோது இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகினார்.
பணம் மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை
இப்படிப்பட்ட இளைஞர்களிடம் பணம் மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் சோழவந்தான் அருகே முள்ளிப்புள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்து இளங்கோவன்(22) மற்றும் சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த மகாலிங்கம் (21) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் தலைமறைவான இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இரவு 10 மணிக்கு நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தில் போலீசாரில் தீவிர விசாரணையில் ஆறு மணி நேரத்திற்குள்ளாக வழிப்பறியில் இரு இளைஞர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.
