பத்திரப்பதிவு முழுவதுமாக, எண் ஒதுக்குவதை தவிர பிற நடவடிக்கைகள் அனைத்தும் முன்பிருந்த பதிவாளர் பாலசுந்தரால் ஜூலை 3ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அவர் விடுப்பில் சென்றதால் பொறுப்பு பதிவாளராக மனுதாரர் ஆவண எண்ணை ஒதுக்கி, மீதப்பணிகளை முடித்துள்ளார். அவ்வாறு இருக்கையில் நடவடிக்கைகள் இருபக்கமும் எடுக்க வேண்டும்- நீதிபதி.
பழனி கோயில் நில கண்காணிப்பாளர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென பழனி கோயில் நில கண்காணிப்பாளர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சார்பதிவாளர் தரப்பில், " 3.7.26 முந்தைய சார்பதிவாளரால் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 6.7.26 அதன் பின்னர் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட பதிவாளர், பழனி பதிவாளர் விடுப்பு என்பதால் என்னை பொறுப்பு வகிக்குமாறு தெரிவித்தார். பாலசுந்தர் எனும் சார்பதிவாளரே பதிவு செய்து, கையெழுத்திட்டுள்ளார். நான் பதிவு செய்யவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், "மனுதாரர் மீது ஏற்கனவே அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்து வழங்கியதாக, 2 வழக்குகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2 குற்றச்சாட்டுகள் உள்ளன
பத்திரப்பதிவு நடைமுறை யாரால் செய்யப்பட்டது? நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பில், "இருவராலும் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், "ஜூலை 3ஆம் தேதி பாலசுந்தர் பதிவு செய்துள்ளார். ஜூலை 6ஆம் தேதி, மனுதாரர் எண் ஒதுக்கி ஆட்சியரிடம் அனுப்பியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, " பத்திரப்பதிவு செய்தது உள்ளிட்ட முதல் கட்ட விவரங்களை செய்தது முன்பிருந்த சார்பதிவாளர் தானே? என கேள்வி எழுப்பினார். அரசுத்தரப்பில், "மனுதாரர் தான் பத்திரப்பதிவை முழுவதுமாக செய்துள்ளார். அவர் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, " பத்திரப்பதிவு முழுவதுமாக, எண் ஒதுக்குவதை தவிர பிற நடவடிக்கைகள் அனைத்தும் முன்பிருந்த பதிவாளர் பாலசுந்தரால் ஜூலை 3ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அவர் விடுப்பில் சென்றதால் பொறுப்பு பதிவாளராக மனுதாரர் ஆவண எண்ணை ஒதுக்கி, மீதப்பணிகளை முடித்துள்ளார். அவ்வாறு இருக்கையில் நடவடிக்கைகள் இருபக்கமும் எடுக்க வேண்டும். எனவே மனுதாரருக்கு நிபந்தனை இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
