காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடரும் வரதட்சணை கொடுமை
 
திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் நடைபெற்றுள்ள ஒரு மிரளவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரின் வரதட்சணை கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
 
காவல்துறையில் பணி செய்தும் தொடர்ந்த கொடுமை
 
அவரது கணவர் பூபாலன், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர். காவலர் பூபாலன் தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் தன் தங்கையிடம் தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தினேன் என்பதை தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்திருக்கிறார். இதில் குற்றவாளிகளை எப்படி காவலர்கள் கொடுமையாக கையாளுவார்களோ அதே போல் தன் மனைவியை தன் சித்திரவதை செய்ததாகவும் கூறுகிறார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நான்கு நபர்கள் மீது குற்றச்சாட்டு
 
இளம்பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புகாரில், இளம்பெண்ணின் கணவர் மற்றும் அப்பன் திருப்பதி காவலராக பணியாற்றும் பூபாலன், அவரது தந்தை சாத்தூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் செந்தில்குமரன், மாமியார் விஜயா மற்றும் நாத்தனார் அனிதா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
 
தனிப்படை அமைப்பு
 
இவர்கள் நால்வரும் தலைமறைவாக இருந்த நிலையில், மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில், ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் அடங்கிய தனிப்படை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டது.
 
காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
 
இதையடுத்து, தலைமறைவாக இருந்த பூபாலனையும், அவரது தந்தை செந்தில்குமரனையும் பணியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.