மதுரையில் இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் - மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய நண்பன் - வீடுதேடி சென்று தூக்கத்தில் இருந்து எழுப்பி கைது செய்த காவல்துறை.
 
நண்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
 
மதுரை மாநகர் உலகனேரி ராஜிவ்காந்தி்நகர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (27) என்ற ஆட்டோ ஓட்டுனரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த லோடுமேனாக பணிபுரிந்துவரும் தமிழரசன் என்பவரும் நண்பராக இருந்துவந்துள்ளனர். இருவர் மீதும் காவல்நிலையத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்த  அபினேசும் அவரது நண்பர் தமிழரசனும் வீட்டின் முன்பாக மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவரிடையே பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வார்த்தை மோதல் திடீரென  கைகலப்பாகியுள்ளது.  
 
உடலை கைப்பற்றினர்
 
பின்னர் அபினேசும், தமிழரசனும் இருவரும் மாறி மாறி அருகில் இருந்த கட்டையால் தாக்கியுள்ளனர்.  அப்போது தமிழரசன்  அருகில் இருந்த பெரிய கட்டையால் அடித்தபோது அபினேஷ் வலியால் முனங்கியபடி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தமிழரசன் போதையில் நடந்து வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார். இதனிடையே அருகில் உள்ளவர்கள்  கீழே மயங்கி நிலையில் கிடந்த அபினேஷ்  முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் அபினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் தடயவியல் நிபுணர்கள் கட்டை, ஓடு ஆகியற்றை கைப்பற்றியதோடு மாட்டுத்தாவணி காவல்துறையினர் உதவியுடன் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது.
 
தூங்கியபோது கைது
 
அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது இருவரும் நடந்துசென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அபினேசின் நண்பர் தமிழரசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு தூங்கிகொண்டிருந்த தமிழரசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, இருவரும் மதுபோதையில் இருவரும் தாக்கிகொண்டோம் என கூறியதோடு அபினேஷ் உயிரிழந்தது தெரியாது என கூறி அழுதுள்ளார். பின்னர் தனது நண்பனை மதுபோதையில் அடித்ததில் நண்பன் உயிரிழந்தது தெரியாமல் வீட்டில் தூங்கிகொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த அபினேஷ் மற்றும் தமிழரசன் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது தொடர்பாக அபினேஷ் தமிழரசனை தாக்கியதில் தமிழரசன் காயமடைந்து 6 மாதம் சிகிச்சையில் இருந்துவந்த பின்னர் மீண்டும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் மதுபோதையில் விளையாட்டுதனமாக கட்டையால் அடித்து மோதலில் ஈடுபட்டதால் தனது நண்பனை கொலை செய்தது கூட தெரியாமல் வீட்டில் தூங்கியுள்ளது குறிப்பிடதக்கது.