மதுரையின் ரத்த சரித்திரம்.. 22 வருட பகை.. 22 கொலை.. 2 கேங்குக்கு இடையே நடப்பது என்ன? கேங் வாருக்கு யார் காரணம்?

அமைதியாக இருந்த இந்த மோதல் கொலையில் தொடக்க புள்ளியாக அமைந்தது தலைவலியை அளிக்குமோ என அச்சத்தை காவல்துறையினர், மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

Continues below advertisement

மதுரையில் 22 ஆண்டுகளாக இரண்டு கேங்குக்கு இடையே நடந்து வரும் கேங் வாரில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முடியாமல் நீளும் இந்த கொலைகளுக்குக் காரணம் என்ன? 

மதுரையில் நடைபெற்ற கொலை

 
மதுரை கார்ப்பரேஷன் முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் அக்கா மகன் காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி (30). இவரை, கடந்த மார்ச் 22-ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதில் ராஜபாண்டியின் ஆதரவாளர் என சொல்லப்படும் வெள்ளைக் காளியின் திட்டமிடல்தான் இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிறையில் இருந்தவாரே குருசாமியை தனது ஆதரவாளர்கள் மூலம் பெங்களூரில் கொலை செய்ய முயற்சித்தார் என புகார் வாசிக்கப்பட்டது. அதில் படுகாயமடைந்த வி.கே.குருசாமி தீவிர சிகிச்சையில் இருந்து தற்போது வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். மதுரையில் வி.கே. குருசாமி ஆதரவாளர்களுக்கும் - ராஜபாண்டி ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. 
 

 ”வி.கே குருசாமி -  ராஜபாண்டி” யார் இவர்கள், ஏன் இந்த தீராதப் பகை?

வி.கே.குருசாமியும் - ராஜபாண்டியனும் உறவினர் தான். இருவரும் கமுதி அருகே உள்ள கருத்தரிவான் கிராமத்தை சேர்ந்தவர்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை என குடும்பத்துடன் இருவருமே மதுரை காமராஜர்புரத்தில் இடம் பெயர்ந்தனர். இதில் வி.கே. குருசாமி (55) தி.மு.கவிலும் ராஜபாண்டி அ.தி.மு.கவிலும் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினர்.

 

போஸ்டரால் வந்த வினை

 
2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற தருணம். அப்பொழுது, தேர்தல் என்றாலே போஸ்டர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கும். இதிலும் மதுரை என்றால் சொல்லவா வேண்டும். இந்த சமயத்தில் மதுரையின் முக்கிய பகுதியில் போஸ்டர் ஒட்டுவதில் இருவருக்கும் இடையே முதன் முதலாக விரோதம் வேர்விட்டது.  இது ஒரு கோயில் திருவிழாவில் பெரிதாக வெடிக்க, ராஜபாண்டி ஆதரவாளரும் உறவினருமான சின்ன முனுசு என்ற முனுசாமியை வி.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்தனர். இதில் சின்ன முனுசு தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைகாளி குருசாமியின் மீது ஆத்திரம் அடைந்தார். 
 

ஆரம்பமான பழிக்குப் பழி

 
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த மாரிமுத்து, மூர்த்தி, ரமேஷ் ஆகிய மூவரும் 2008ல் கொலை செய்யப்பட்டனர். 2013ல் வி.கே.குருசாமியின் தங்கையின் கணவர் பாம்பு பாண்டி கொல்லப்பட்டார். இதற்கு பழி வாங்க ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த மொட்டை மாரி என்பவரை 2015ல் வி.கே. குருசாமி தரப்பு கொலை செய்தது. இதற்குப் பழிவாங்க அதே ஆண்டில் வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமியை ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது. இதற்குப் பிறகு இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
 

துப்பாக்கிச் சூடு

 
இந்நிலையில் 2016ல் கமுதியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜா என்ற முத்துராமலிங்கம் சுற்றுச்சாலை பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு ராஜபாண்டியின் ஆட்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு, குருசாமியின் வீட்டிற்குள் புகுந்த ராஜபாண்டியின் ஆட்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கு வந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி சிலரைக் கைது செய்தது. ஆனால், மருமகனை இழந்திருந்த வி.கே குருசாமி கொதித்துப் போயிருந்தார். மருமகனின் இழப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, குருசாமியன் ஆட்கள் 2017ம் ஆண்டு ஜூன் 13 இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் முனியசாமி என்ற தொப்புளியை பத்து கார்களில் வந்த குருசாமியின் ஆட்கள் கமுதிக்குக் கடத்திச் சென்றனர். அங்கே அரியமங்களம் அருகே வைத்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலைசெய்து, எரித்துவிட்டனர்.
 

கொலை செய்ய தீவிரம்

இந்தக் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வி.கே.குருசாமியின் மருமகன் எஸ்.எஸ் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் அரசியலிலும் வி.கே. குருசாமிக்கு நல்ல வளர்ச்சி இருந்தது. ஒருகட்டத்தில் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவராக உயர்ந்தார் குருசாமி. இருந்தாலும் தனது மகன் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ராஜபாண்டியன், "குருசாமியைக்" கொன்றே ஆக வேண்டும் என ராஜபாண்டியும், வெள்ளை காளி கும்பலும் தீவிரமாக இருந்தது.
 

நிலுவையில் உள்ள 20க்கும் மேற்பட்ட வழக்கு

 
மதுரை நகரக் காவல்துறைக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியாக மாறிய நிலையில், இரு தரப்பையும் அழைத்து நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கினர். குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் பாளையங்கோட்டை சிறையிலும் பிறகு வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்ட குருசாமி வெளியில் வந்தபோது, ராஜபாண்டியை எதிர்த்து நிற்க தன்னுடன் ஆட்கள் இல்லை என்பதால், மதுரை விட்டு வெளியேறி பெங்களூர், சென்னை என வசிக்க ஆரம்பித்தார். குருசாமியின் மீது கொலை, கொலை முயற்சி, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்தன. 
 

டீக்கடையில் தகராறு

 
இந்த வழக்குகளில் ஆஜராவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரை வந்த குருசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். மதுரையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றடைந்தார். அதற்கு அடுத்த நாள் பெங்களூர் கம்மன்னஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் தேநீர் குடிப்பதற்காக உட்கார்ந்திருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கி, வாள், அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குருசாமி காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று அவ்வப்போது வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். "கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து இருவரும் மோதி வருகின்றனர்.  இதில் குருசாமி தரப்பில் 10க்கும் மேற்பட்டவர் ராஜபாண்டி தரப்பில் 8-க்கும் மேற்பட்டவர் என 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வி.கே குருசாமி, ராஜபாண்டி, வெள்ளைகாளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வெள்ளைக் காளி 2022-ஆம் ஆண்டு கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.
 

கையில் எடுத்த வெள்ளைக்காளி

 
வெள்ளை காளி தனது அண்ணனை குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆட்களைக் கொன்றுவந்தார். வெள்ளைகாளி 40க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. வி.கே குருசாமி தற்போது தி.மு.கவிலிருந்து விலகி செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ராஜபாண்டி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால், குருசாமியைப் பழிவாங்கும் திட்டத்தை வெள்ளைக் காளி முன்னேடுத்து வருகிறார்" என்கின்றனர். 
 

மீண்டும் தலைவலி

 
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குருசாமியின் அக்கா மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் வெள்ளை காளி மூளையாக  சிறையில் இருந்து திட்டமிட்டு கொடுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் 22 கொலைகள் இந்த இரண்டு கேங்-கிற்கு  இடையேயான தீராத பழியாக மாறி மாறி கொலை செய்த மதுரையின் ரத்த சரித்திரமாக மாறி இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த மோதல் கொலையில் தொடக்க புள்ளியாக அமைந்தது தலைவலியை அளிக்குமோ என பதட்டத்தை காவல்துறையினர், மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement
Sponsored Links by Taboola