மதுரை மாநகராட்சி வரி  முறைகேடு  வழக்கு கைதான இரு தற்காலிக ஊழியர்களுக்கு ஜாமீன்  மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
 
மதுரை மாநகராட்சி முறைகேடு மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை  முறைகேடு செய்ததாக மதுரை மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏப்ரல் 1, 2022 முதல் ஜூலை 31, 2024 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த இந்த முறைகேட்டில்  சுமார் 150 கட்டிடங்களின் சொத்து வரி விதிகளுக்குப் புறம்பாகக் குறைக்கப்பட்டதும், இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பழனிக்குமார் மற்றும் ஜெயப்பிரியா ஆகியோர் ஜாமீன்  கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  
 
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி இந்த மனு நீதிபதி எஸ். சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் தாங்கள் வெறும் தற்காலிக ஊழியர்கள் என்றும், வரி குறைப்பு செய்வதற்கான ஆன்லைன் பாஸ்வேர்ட் தங்களுக்குத் தெரியாது. மேலும், கைதான பிற நபர்களுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது, எனவே தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இவர்கள் இருவரும் வரி வசூலிப்பவர்களுக்கு உதவியாளர்களாகச் செயல்பட்டு, பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெற்று வரி குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கூகுள் பே மூலமாகப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாலும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாலும், இப்போது ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.