மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட அரசு பொருட்கள் விற்பனையில் போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய், மோசடி புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை சிறைத்துறை எஸ்பி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் மோசடி புகார்
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக எழுதுபொருட்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலங்கள், நீதின்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடுகிறது. இந்த விற்பனையில் கடந்த 2021ஆம் ஆண்டில் போலி ரசீது தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடி புகார் தொடர்பாக கணக்கு தணிக்கைதுறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது 1கோடி 51லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்களை விற்பனை நடைபெற்றதாக கூறப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
சிறையில் நடந்த விசாரணை
மேலும் இதேபோன்று தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளிலும் சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14.5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தணிக்கைத்துறை தெரிவித்ததோடு , ஊழல் தடுப்பு இயக்குநரக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் நடத்திய விசாரணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு
அதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா (தற்போது கடலூர் மத்திய சிறையில் எஸ்பியாக உள்ளார்) பணியாற்றி வரும் ஊர்மிளா(வயது 39), மதுரை சிறையின் சிறை அதிகாரியும், தற்போது பாளையங்கோட்டை சிறை ADSP வசந்தகண்ணன், மதுரையில் பணியாற்றி, தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜாபருல்லாகான் முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையை சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த முறைகேடு வழக்கில் விசாரணையின் முடிவில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் போலி ரசீது மூலமாக பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தற்பொழுது வெவ்வேறு சிறைகளில் அதிகாரிகளாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?