செந்தில்குமார் சாமநத்தம் கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார், காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்ற போது நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர்.
 
வெட்டியதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலே மரணம்
 
 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சேர்வை மகன் செந்தில்குமார் (வயது 36 ) . இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் டீக்கடையை திறக்க சென்ற செந்தில்குமாரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலையில் வெட்டியதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலே மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
 
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
 மேலும் செந்தில்குமார் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் டீ கடையில் இரவு நேரங்களில் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த செந்தில்குமாரை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதும்  காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது
 
இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டியளிக்கயில்..,” மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது. கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது. 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.