கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து மர்ம நபர்கள் லேப்டாப் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோவை வையாபுரி நகரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் குரும்பபாளையம் பகுதியில் தனது நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து ஒரு வாடகை அறையில் தங்கி படித்து வந்தார்.

மாணவர்கள் தங்கிய அறையில் துணிகரம்

Continues below advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சித்தார்த் உடற்பயிற்சிக்குச் செல்லத் தயாராகி, அறையின் முன்பக்க கதவை திறந்தபடியே வைத்து குளியலறைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், திறந்து இருந்த கதவு வழியாக அறைக்குள் நுழைந்து, அங்கு இருந்த லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு குளித்து வந்த சித்தார்த், லேப்டாப் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, இரண்டு நபர்கள் சாவகாசமாக அறைக்குள் நுழைந்து லேப்டாப் பையை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சித்தார்த் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் அதிக அளவில் தங்கி படித்து வருவதால், அவர்களை குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மாணவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அறை கதவுகளை முறையாக பூட்டிக் கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.