கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி சிரஞ்சீவி (23)  வக்கீல் லே-அவுட் பகுதி வழியாக நடந்து சென்றபோது எதிரில் வந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1,500 பறித்து சென்றார். இதுகுறித்து சிரஞ்சீவி ஓசூர் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிரஞ்சீவியிடம் பணத்தை பறித்தது ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரித் (25) என தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனை தொடர்ந்து ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி முனியப்பன் (30)  சின்ன எலசகிரி சாந்தபுரம் ஏரி அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சையத் அர்பஷ் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 



அதே போல் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த காவலாளி செல்வகுமார் (44).  ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், செல்வகுமாரை கத்தி முனையில் மிரட்டி 1.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து செல்வகுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகையை பறித்தது ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முரளி (19) என தெரிய வந்தது.


இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து 3 வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வழிப்பறி திருடர்களையும் கைது செய்த ஓசூர் காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.