கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி ஊரைச் சேர்ந்தவர் சுபாஷ் (25). இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது சுபாஷுக்கும், அரியலூர் மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதலர்கள் திருப்பத்தூர் வந்து தங்கி இருந்தனர். இதனை அறிந்த சுபாஷின் தந்தை தண்டபாணி காதலர்கள் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து அவரது வீட்டில் தங்க வைத்தார். சுபாஷின் தந்தை தண்டபாணி அவரது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்து நிலையில் சனிக்கிழமை அதிகாலை தண்டபாணி அவரது மகன் சுபாஷ், மனைவி அனுசுயா, மற்றும் சுபாஷின் பாட்டி ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் சுபாஷ் மற்றும் அவரது பாட்டி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன்பின்னர் தண்டபாணி, இளம்பெண் அனுசுயாவையும் சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அனுசியா உடனே ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.



ஆனால் அனுசியாவின் உடல்நிலை மேலும் பாதித்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுசியாவை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுசுயாவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த நிலையில் சேலம் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தங்க கார்த்திகா சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் அனுசியாவிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தலை, கைகள், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த அனுசுயாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அனுசியாவின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் நிலை குலைந்து கிடக்கின்றனர். தலை, கைகள் மணிக்கட்டு என பல இடங்களில் வெட்டப்பட்டுள்ள அனுசியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் கைகள் பழைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 



இதுகுறித்து அனுசுயாவின் தந்தை சுவாமிநாதன் கூறுகையில், "பெண்ணின் முகத்தை பார்க்கும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் வேதனையாக உள்ளது. என் பொண்ணு வெளியே வந்து என்ன சொல்லுதோ அதைத்தான் தீர்ப்பாக வழங்க வேண்டும்" என்று கூறினார்.


அனுசியாவின் அத்தை கூறுகையில், "எங்களது குடும்பத்தில் முதல் பட்டதாரி அனுசியா. எப்படியாவது பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என கஷ்டப்பட்டு படிக்க வச்சோம். இரண்டு கைகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் அனுசியாவை வெட்டி உள்ளார். தண்டபாணிக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த நிலை யாருக்கும் வராமல் இருப்பதற்கு தமிழக அரசு சாதியை ஒழிக்க வேண்டும். வேற்று சாதி பெண் என்பதால் அந்த ஊரில் உள்ள யாரும் அனுசுயாவிற்கு தண்ணீர் கூட தரவில்லை” என்று கூறினார்.