காரிமங்கலம் அருகே முன் விரோதம் காரணமாக மூன்று பேரை மிளகாய் பொடி தூவி, ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காயம் அடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கும் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியில் இருந்து வரும் அவரது தங்கை மீனாட்சி மற்றும் கணவர் மதியழகன் ஆகியோருக்குமிடையே, சொத்து சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் தனது நண்பர்கள் லோகநாதன், தாமோதரன் ஆகியோருடன் மாட்லாம்பட்டியில் உள்ள தங்கை மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது மீனாட்சியிடம், உனது கணவர் மதியழகன் எங்கே என கேட்டுள்ளார். ஏற்கனவே கோகுல கிருஷ்ணனுக்கும் தங்கை மீனாட்சிக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. அப்பொழுது மீனாட்சி தனது கணவர் மகன் இருவரும் வெளியில் துணி வியாபாரத்துக்கு சென்று உள்ளனர் என பேசி கோவமாக திட்டி அனுப்பி உள்ளார். 

 

ஆனால் மீனாட்சி கணவரை தாக்கும் நோக்கில் தனது நண்பர்களுடன் கோகுல கிருஷ்ணன் திட்டமிட்டு மாட்லாம்பட்டி வந்த நிலையில், மதியழகன் இல்லாததால், தருமபுரி செல்வதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்த மதுபான கடைக்கு சென்று மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக திரும்பி கிருஷ்ணகிரி நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.



 

அப்பொழுது நல்லம்பட்டி அருகே கோகுல கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களை தேடிக்கொண்டு வந்த மீனாட்சி அவரது மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அப்பொழுது மூவரையும் கண்டு இந்த கும்பல் தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிளகாய் பொடியை தூவி, கடுமையாக இரும்பு கம்பிகளை கொண்டு சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூவரும் கீழே விழுந்துள்ளனர். அப்பொழுதும் அவர்கள் மீது இந்த கும்பல் சராசரியாக தாக்கியுள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்பொழுது முன் விரோதம் காரணமாக தங்கை மற்றும் உறவினர்கள் தாக்கியதில், அண்ணன் கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் தாமோதரன் லோகநாதன் மூவரும் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் மற்றும் மதிகோண்பாளையம் காவல் துறையினர் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக மூன்று பேரை ஒரு கும்பல் உலகை பிடித்து கடுமையாக தாக்கும் படம் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.