திருமணத்திற்குப் பிறகு விஸ்மயாவினை நான் துன்புறுத்தியுள்ளேன் என போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார் கிரண்குமார். ஒருமுறை கணவரால் தாக்கப்பட்ட விஸ்மயா தப்பிப்பதற்காக ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் தஞ்சம் அடைந்திருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த கிரண் குமாருக்கும் – விஸ்மயா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக பணிபுரியும் கிரண்குமாருக்கு  100 பவுன் தங்கநகைகள், ஒரு டொயோட்டா யாரிஸ் கார் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் ஆகியவற்றை வரதட்சனையாகக் கொடுத்துள்ளனர் விஸ்மயாவின் பெற்றோர்கள். ஆனாலும் தனக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட யாரிஸ் காரின் மைலேஜ் சரியில்லை என்று கூறி அந்தக் காருக்குப் பதிலாக விஸ்மயா குடும்பத்தினரிடமிருந்து பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி மனைவி விஸ்மயாவைத் துன்புறுத்தி வந்துள்ளார் கிரண்குமார். தான் படும் கஷ்டங்கள் குறித்து தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இதுகுறித்து அடிக்கடி தெரிந்து வந்துள்ளார் விஸ்மயா. இதோடு கணவர் கிரண்குமார் தாக்கியதால் உடலில் ஏற்பட்ட காயங்களையும் வாட்ஸ் அப் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பியது தான் மர்ம மரணம் வழக்கில் மிகப்பெரிய சாட்சியாக உள்ளது.



விஸ்மயா கடந்த ஜூன் 22-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், பெற்றோர்கள் இதற்கு காரணம் கணவர் கிரண்குமார் தான் எனவும் ஏற்கனவே விஸ்மயா அனுப்பிய போட்டோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சமர்பித்தனர்.  மேலும் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு நடத்தியபோது, அதில் விஸ்மயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாார் என தெரியவந்தது. இருந்தாலும் இது உண்மையில் நடந்ததா? இல்லை கொலை செய்தார்களா? எனவும் விசாரணையினை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான், இச்சம்பவம் தொடர்பாக கொல்லம் காவல்நிலையத்தில் சரணடைந்த கிரண்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுவந்தனர். இதில், தான் திருமணத்திற்குப் பிறகு விஸ்மயாவினை தாக்கி துன்புறுத்தியுள்ளேன் என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். 


மேலும் இவ்வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக  சம்பந்தப்பட்ட இடத்திற்கு கிரண்குமாரினை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. கிரண்குமார் இல்லம் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதோடு கொல்லத்தில் ஊர்க்காவல் படைக் காவலரின் வீட்டிலும்  போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏனென்றால் திருமணம் ஆன சில நாட்களுக்குப்பிறகு விஸ்மயாவின் வீட்டிற்கு செல்வதற்காக கிரணுடன் காரில் பயணித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கம் போல் விஸ்மயா தாக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தம்மைக்காத்துக்கொள்வதற்காக ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் தஞ்சம் அடைந்திருந்தார் விஸ்மயா. எனவே அவர்களது இல்லத்திற்கு சென்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து ஊர்க்காவல் படையினை சேர்ந்த குடும்பத்தினர் தெரிவிக்கையில், “விஸ்மயா அழுதுகொண்டே எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார்“ என எங்கள் வீட்டிற்குள் ஓடி வந்தார்.


மேலும் வரதட்சணையாக கொடுத்த கார் சரியில்லை எனவும் புதிய காரினை உடனடியாக வாங்கி தரவேண்டுமென உன் பெற்றோர்களிம் சொல் என்று கூறி அடித்ததாக தெரிவித்தார் என கூறினர். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே விஸ்மயா இருக்கும் இடத்தினை கிரண் கண்டுபிடித்து மீண்டும் அழைத்து சென்றதாகவும் தெரிவித்தனர்.





மேலும் இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, வங்கியின் லாக்கரில் வைக்கபட்டிருந்த விஸ்மயாவின் தங்க நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். குறிப்பாக இந்த மர்ம மரண வழக்கில் கிரண்குமாரின் பெற்றோர்கள் மாறுப்பட்ட நிகழ்வுகளைத் தெரிவித்து வருவதால் விரைவில் இவர்களிடம் விசாரணையை கேரள போலீஸ் தொடங்கவுள்ளது.  23 வயதான ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவி விஸ்மயாவின் மரணம் கேரள மட்டுமில்லாது நாடு முழுதுவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து  பல கேரள பெண்கள் நாங்கள் எங்களது திருமணத்திற்கு வரதட்சணைக்கொடுக்க மாட்டோம் என்று உறுதியெடுத்துள்ளனர்.