இணையத்தில் கூடுதலாக லைக், கமெண்ட் ஷேர் வாங்குவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் சில இணையவாசிகள். சில சமயம் தங்களைத் தாங்களே கிண்டல் செய்துகொள்கிறார்கள். சில சமயங்களில் தங்கள் உயிருக்கும், பிறரது உயிர்களுக்கும் ஆபத்தான செயல்களையும் செய்துவிடுகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வு கேரளாவின் மலம்புழா பகுதியில் நிகழ்ந்துள்ளது.
புதிதாக வாங்கியுள்ள மஹிந்த்ரா தார் வாகனத்தில் சாகசங்களைச் செய்த சில யூட்யூபர்கள் தற்போது வழக்குகளால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தின் போது, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பகுதியில் மஹிந்த்ரா தார் என்ற ஜீப் வடிவிலான வாகனத்தை வைத்து சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர் சில யூட்யூபர்கள். மேலும், தாங்கள் செய்த ஆபத்தான சாகசங்களை பாதுகாப்பற்ற முறைகளில் படம் பிடித்தும் உள்ளனர். இந்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, இதன் மீது காவல்துறையினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
முதல் கட்ட விசாரணைகளில் இந்தக் காரை ஓட்டிய யூட்யூபர் அனுமதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டைத் தாண்டி, அதீத தேகத்தில் பயணித்து வாகனத்தை இயக்கியுள்ளார் எனவும், இந்த வீடியோ மலம்புழா அணை அமையப்பட்டிருக்கும் தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரளா காவல்துறை, கேரளா வட்டாரப் போக்குவரத்துத் துறை, நீர்வளத் துறை முதலான பல்வேறு அரசுத் துறைகள் தலையிட்டுள்ளனர். இதில் ஏற்கனவே வட்டாரப் போக்குவரத்துத் துறை ஆபத்தான முறையில் பயணித்த யூட்யூபரைக் கண்டுபிடித்து, ஆபத்தான பயணம் மேற்கொள்ளுதல், அனுமதியின்றி வாகனத்தை மாற்றியமைத்தல் முதலான குற்றங்களுக்காகச் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கேரள நீர்வளத் துறையின் புகாரைப் பெற்றுள்ள வட்டாரப் போக்குவரத்துத் துறை இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளிலும், இடங்களிலும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களைப் பலரும் இணையத்தில் செய்து வருவது அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன், கேரளா வட்டாரப் போக்குவரத்துத் துறை KTM Duke என்ற இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த இளைஞர் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். இந்த இளைஞரின் வீடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் பார்த்து, இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரளாவின் சாலை ஒன்றில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் விதிகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது, இந்த ஒரு இளைஞர் மட்டும் பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான ஸ்டண்ட்களைச் செய்துகொண்டிருந்தது அவர் பதிவுசெய்திருந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. கடந்த மே மாதம், Yamaha R15 வாகனத்தில் ஸ்டண்ட் செய்து, வீடியோ பதிவிட்ட மற்றொரு இளைஞர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அபராதம் பெறப்பட்டு அனுப்பப்பட்ட பிறகும், ஸ்டண்ட் செய்ததால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI