Kerala: பிறந்த குழந்தையை வீசிச் சென்ற மர்ம நபர்கள்; மெட்ரோ நகரத்தை உலுக்கிய சம்பவம்!
கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து சில மணிநேரங்களே ஆன நிலையில் குழந்தையின் உடல் சாலையில் சடலமாக ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த கேரளாவை மட்டும் இல்லாமல் இந்த செய்தியை கேள்விப்படுபவர்கள் மனதையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான சம்பவம் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடைபெற்றுள்ளது. கேரளா மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் சாலையில் இன்று காலை அதாவது மே மாதம் 3ஆம் தேதி காலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையின் உடல் இறந்த நிலையில் ஒரு ப்ளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டவாறு கிடந்தது.
இதனை முதலில் பார்த்த நபர்கள் காவல்துறையினருக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் கொடுக்க, விஷயம் காட்டுத்தீபோல கொச்சி முழுவதும் பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, பிறந்து சில மணி நேரங்களே ஆன இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றினர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் இருந்து, வீசப்பட்டுள்ளது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொச்சி பனம்பிள்ளி நகருக்கு அருகில் உள்ள வித்யா நகரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குழந்தையின் உடல் வீசப்பட்டதாக பதிவாகியுள்ள அப்பார்ட்மெண்ட்டில் இருந்து யாரும் வெளியேறக்கூடாது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த அப்பார்ட்மெண்டில் யாரெல்லாம் கர்ப்பமாக இருந்தார்கள் எனவும் காவல்துறை விசாரணை செய்து வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், வேறு பகுதியில் வசிப்பவர்கள் யாராவது குழந்தையை இங்கு வீசிச் சென்றார்களா என்றும் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் கே.எஸ்.சுதர்சன் செய்தியாளார்களிடம் கூறுகையில், “நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் விசாரித்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளை நாங்கள் மீட்டுள்ளோம், அதில் இறந்த உடல் சுற்றப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள பக்கத்திலிருந்து கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபரை விரைவில் அடையாளம் காண்போம்” என தெரிவித்தார்.
இது மனிதாபிமானமற்ற செயல், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று எர்ணாகுளம் எம்எல்ஏ டிஜே வினோத் கூறினார்.
திருக்காக்கரை எம்எல்ஏ உமா தாமஸும் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களிடம் பேசினார். "சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள மக்கள் வசிக்காத இடத்தில் மக்கள் கழிவுகளை கொட்டுவது தெரியவந்துள்ளது. கழிவுகள் கொட்டும் இடத்தில் உடலை வீச முயன்று தோல்வியடைந்திருக்கலாம். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.